மனைவியுடன் சண்டை- கணவனை ஓட ஓட விரட்டி வெட்டிய பெண்ணின் உறவினர்கள்

 
Murder

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடக்கோடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம் (48) ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி ராதா (39). இவர்களுக்கு மனோஜ் மற்றும் தீபக் என்ற இரு மகன்கள் உள்ளனர். 

கொலை செய்யப்பட்ட கோதண்டம்

இந்நிலையில் கோதண்டம் ராதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் இன்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்களுக்குள் தொடர்ந்து சண்டையிட்டு கொள்வது அவர்களின் குடும்பத்தினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோதண்டத்தின் மனைவியான ராதாவின் உடன்பிறந்த அக்காள் ராஜம்மாள் என்பவரது மகன்கள் ஜஸ்வந்த் (30) கோகுல் (28) ஆகிய இருவரும் கோதண்டத்தினை  கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர். 

கோதண்டம் ஆட்டோ ஓட்டி வந்த பொழுது கடைக்கோடு  பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி எதிரே ஜஸ்வந்த் மற்றும் கோகுல் கோதண்டத்தின் ஆட்டோ மீது காரை வேகமாக மோதியுள்ளனர். ஆட்டோ மற்றும் கார் சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான காரில் இருந்து வெளியே வந்த ஜஸ்வந்த் மற்றும் கோகுல் தாங்கள் வைத்திருந்த  அறிவாளால் கோதண்டத்தினை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில்  கோதண்டம் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் கோத்தகிரி காவல்துறையில் தகவல் அளித்தனர்.

Tamil News

தகவல் அறிந்த கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கோதண்டத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌. மேலும் கொலை சம்பவத்தை அரங்கேற்றிய ஜஸ்வந்த் மற்றும் கோகுல் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோதண்டத்தின் மனைவியான ராதாவையும் காவல்துறையின் விசாரணைக்கு அழைத்து சென்றனர். கொலையாளிகள் இருவரையும் கோத்தகிரி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இரண்டு இளைஞர்களும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  சினிமா பாணியில் அரங்கேறிய கொலை சம்பவம் கோத்தகிரி பகுதியையே உலுக்கியுள்ளது.