மகனை கொலை செய்து கைதான தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
சிவகாசியில் குடி போதைக்கு அடிமையான மகனை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். பின்னர் கைதான ராமசாமி உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
தென்காசி எல்.ஆர். எஸ் பாளையம்புங்கடி கோவில் தெருவை சேர்ந்த வயோதிக தம்பதியினர் ராமசாமி (வயது 74)- கிருஷ்ணம்மாள் (வயது 70). இவர்களுக்கு வெங்கட்ராமன்( வயது 47), சுப்பிரமணியன்( வயது 37) ஆகிய இரு மகன்களும், சுப்புலட்சுமி( வயது 40) என்ற மகளும் உள்ள நிலையில், வெங்கட்ராமனுக்கும், சுப்புலட்சுமிக்கும் திருமணமாகி, வெங்கட்ராமன் தென்காசியில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். மகள் சுப்புலட்சுமி ரயில்வே போலீஸ்சாக பணிபுரியும் பாபுவுடன் திருமணமாகி சிவகாசி கற்பக விநாய காநகரில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.2-வது மகன் சுப்பிரமணியனுக்கு திருமணமாகாத பட்சத்தில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள்வதற்காக மறுவாழ்வு மையத்தில் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்துள்ளார். விவசாயத் துறையில் உயரதிகாரியாக பணிபுரிந்த ராமசாமி, கடந்த 2002-ம் வருடம் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு மாதந்தோறும் ஓய்வூதிய பென்ஷன் தொகை ரூபாய் 28 ஆயிரம் வரை கிடைக்குமென்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ராமசாமி இதய நோயால் பாதிக்கப்பட்டு, அவருக்கு சிறுநீரக கோளாறும் ஏற்பட்டுள்ளது. ராமசாமி இதய நோய்க்காக சிவகாசியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சிறுநீரக பாதிப்புக்காக சாத்தூரிலுள்ள தனியார் மருத்துவ மனையில் டயாலிசிஸ் சிகிச்சையும் பெற்று வருகிறார். தென்காசியிலிருந்து சாத்தூருக்கும், சிவகாசிக்கும் அடிக்கடி வந்து செல்ல முடியாத வயோதிக தம்பதியினர், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பொம்மைய நாயக்கர் தெருவில் வாடகை வீடு பிடித்து குடியிருந்து வருகின்றனர். தாய்- தந்தையுடன் வசித்து வந்த மகன் சுப்பிரமணியன், அன்றாடம் தனது தந்தை ராமசாமியிடம் குடிப்பதற்கு ரூபாய் 600 வரை கொடுக்க வேண்டுமென்று தாய்- தந்தையரை மிரட்டி, துன்புறுத்தி வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. மகனின் அன்றாட செயல்பாட்டினால் வயதான தம்பதியினர் இருவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர்.
இதற்கொரு முடிவு கட்டி தீர்வு காண வேண்டு மென்ற எண்ணத்திலிருந்த முதியவர் ராமசாமி, கடந்த1- ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை தனது காது கேளாத மனைவி கிருஷ்ணம்மாள் திருத்தங்கலிலுள்ள கோவிலுக்கு சென்றிருந்த சமயத்தில், வீட்டினுள் கட்டிலில் போதையில் உறங்கிக் கொண்டிருந்த மகன் சுப்பிரமணியனை சவுக்கு கட்டையால் மண்டையில் தாக்கி, அரிவாள்மனையால் தலையில் வெட்டி காயப்படுத்தியதோடு, தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சு போக செய்து கொலை செய்துள்ளார். பின்பாக தனியார் ஆம்புலன்ஸ் க்கு தகவல் தெரிவித்த ராமசாமி தனது மகன் சுப்பிரமணியன் கட்டிலிலிருந்து தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். ராமசாமி முன்னுக்குப் பின் தகவல் கூறியதைக் கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்,சம்பவம் குறித்து திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ வீட்டிற்கு சென்ற போலீசார்கள் சுப்பிரமணியனின் உயிரற்ற உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, முதியவர் ராமசாமியை கைது செய்து மேல் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் ராமசாமியை, மருத்துவர்களின் ஆலோசனைபடி, நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெற்ற மகனையே கொலை செய்த முதியவர் ராமசாமி உயிரிழந்தார்.