அடிக்கடி நண்பனை வீட்டுக்குள் நம்பி விட்டதால் நேர்ந்த கதி! பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

தனது கள்ளக்காதலி அடிக்கடி வந்து சென்ற தனது நண்பனுடன் சென்று அவருடனேயே வாழ்ந்து வந்ததால் கள்ளக்காதலி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றிருக்கிறார் அந்த வாலிபர். ஆனால் அந்த காதலியும் நண்பரும் சேர்ந்து அந்த வாலிபரின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார்கள். இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பாலக்கரையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் . மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார் இந்தக் கூலி தொழிலாளி . இவருக்கு கடலூர் மாவட்டத்தில் முருகன் குடியில் அன்பழகன் என்பவரின் மனைவி கவுதாவுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதுவே கள்ள உறவாக மாறி இருக்கிறது . இருவரும் தனியாக வசித்து வந்திருக்கிறார்கள்.
ஆறுமுகத்தின் நண்பர் உளுந்தூர்பேட்டை அருகே பு.கிள்ளனூரைச் சேர்ந்த வைத்தி என்பவர் அடிக்கடி பார்க்க வந்திருக்கிறார். அப்போது கவிதா உடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதை ஆறுமுகம் ஆரம்பத்தில் இருந்தே கண்டித்தும், கவிதா அதைக் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் .
ஒரு கட்டத்திற்கு மேல் கவிதா, பு.கிள்ளனூர் பகுதிக்கு சென்று வைத்தியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார். இது தெரிந்ததும் ஆறுமுகம் நேற்று முன்தினம் கிள்ளனூருக்கு சென்று தன்னுடன் வருமாறு கவிதாவை கூப்பிட்டிருக்கிறார். அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது பெட்ரோலை கவிதா மீது ஊற்றி தீ வைக்க முயற்சித்திருக்கிறார் ஆறுமுகம்.
இதில் சுதாரித்துக் கொண்ட கவிதாவும் வைத்தியும் அந்த பெட்ரோல் கேனை பிடுங்கி ஆறுமுகத்தின் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார்கள். இதில் அலறி துடித்து உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக் கொண்டு இருந்திருக்கிறார். அப்பகுதியினர் அவரை மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
சம்பவம் குறித்து அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாவையும் வைத்தியையும் கைது செய்துள்ளனர்.