நடத்தையில் சந்தேகம் -கணவன் தலையில் குழவிக்கல்லை போட்டு கொன்ற மனைவி

நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவன் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்திருக்கிறார் மனைவி. சேலத்தில் நடந்திருக்கிறது இந்த பயங்கரம்.
சேலம் மாவட்டத்தில் ஜாகிரெட்டிபட்டி ரயில்வே லைன் ஏரியாவில் வசித்து வந்துள்ளனர் ரமேஷ் -மணிமேகலை தம்பதியினர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மூட்டை தூக்கும் வேலை செய்து வந்த ரமேஷ் , தினமும் வேலை முடிந்து வரும்போது மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
அண்மைக்காலமாக மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் மணிமேகலை இடம் அது குறித்து தகராறு செய்து அவரை அடித்து, உதைத்து வந்திருக்கிறார் ரமேஷ். நேற்று தினம் இரவில் வழக்கம் போல் மனைவியிடம் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்திருக்கிறார் ரமேஷ் . இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஆத்திரம் அடைந்த மணிமேகலை வீட்டில் கிடந்த குழவி கல்லை எடுத்து வந்து ரமேஷை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
இதில் ரமேஷுக்கு கை கால் உள்ளிட்ட பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் வலியால் துடித்த போது, ரமேஷின் தலையில் குழவி கல்லை போட்டு இருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் ரமேஷ்.
இந்த படுகொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். பின்னர் கணவனை கொலை செய்த மணிமேகலையை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேஷ் படுகொலை சம்பந்தமாக அக்கம்பக்கத்தினர் இடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.