போனஸ் கொடுப்பதாக ஏமாற்றி சிறுமிக்கு பாலியல் தொல்லை - மருத்துவர் மீது போக்சோ பாய்ந்தது!

 
மருத்துவர்

கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் மருத்துவமனை நடத்தி வருபவர் மருத்துவர் ரஜினிகாந்த் (55). இவரது மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றி வருபவர் சரவணன்(55). இந்த மருத்துமனையில் பணியாற்றி வந்த கணவரை இழந்த பெண் ஊழியர், தீபாவளி போனஸ் குறைவாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர் அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை. வேலையை விட்டும் நின்றுவிட்டார். மருத்துவர்

இதையடுத்து அப்பெண்ணின் 17 வயது மகளுக்கு வாட்ஸ்அப் மூலம் மருத்துவர் ரஜினிகாந்த் தொடர்புகொண்டுள்ளார். அவரது தாய் ஏன் பணிக்கு வரவில்லை என கேட்டுள்ளார். போனஸ் குறைவாக வழங்கியதால் அவர் பணிக்கு வரவில்லை என பதில் அனுப்பியுள்ளார். இதற்குப் பின் அச்சிறுமியை தொலைபேசியில் தொடர்புகொண்ட மேலாளர் சரவணன், மருத்துவமனைக்கு வந்து தீபாவளி போனஸ் மற்றும் புத்தாடைகளை வாங்கிச் செல்லுமாறு சொல்லியுள்ளார். மருத்துவர் வெளியில் செல்ல உள்ளதால் உடனே மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

மின்னம்பலம்:பாலியல் தொல்லை: ஷீ பாக்ஸில் புகாரளிக்கும் பெண்கள்!

இதனை நம்பி சிறுமி நேற்று முன்தினம் மாலை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.  அப்போது மருத்துவர் ரஜினிகாந்த் அச்சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு மேலாளர் சரவணனும் உடந்தை. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவிக்க, அவர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மருத்துவர், மேலாளர் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மேலாளர் சரவணனை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான மருத்துவரை வலைவீசி தேடி வருகின்றனர்.