“உனக்கு என் பொண்டாட்டி கேட்குதா?”- கம்பெனிக்குள் புகுந்து வெட்டிக்கொன்ற கணவன்
திருவேற்காட்டில் கம்பெனிக்குள் புகுந்து ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவேற்காடு, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு(25), இவர் திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை செய்து வந்தார். இன்று இவரது பணி புரியும் கம்பெனிக்கு வந்த இரண்டு பேர் டில்லிபாபு உடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் டில்லிபாபு அங்கேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன டில்லிபாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது வினோத்(24), மற்றும் அவரது நண்பர் மோகன் என தெரியவந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போது வினோத்தின் மனைவி நிவேதாவுடன் டில்லிபாபுவிற்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்த கள்ளக்காதலை வினோத் கண்டித்து உள்ளார். இருப்பினும் அதனை இருவரும் தொடர்ந்து வந்துள்ளனர். நேற்று இரவும் வீட்டின் அருகே இது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த வினோத் தனது நண்பரை அழைத்து வந்து டில்லி பாபு பணி புரியும் கம்பெனிக்கு நேரடியாக சென்று அவரை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


