16 வயது சிறுமிக்கு ரகசிய கருக்கலைப்பு செய்ய முயன்ற திமுக பேரூராட்சி மன்ற தலைவர் கைது

 
கருக்கலைப்பு

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே 16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய 17 வயது மாணவன் தலைமறைவான நிலையில், பள்ளி சீருடையில் அழைத்து சென்று கருகலைப்பு செய்ய முயன்ற மாணவனின்  பெற்றோர் மற்றும்  பேரூராட்சி தலைவி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 

கருக்கலைப்பு

ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் காவல்நிலையத்திற்குட்பட்ட அரசு பள்ளி ஒன்றில் பயிலும் 16 வயது மாணவியை, அதே பள்ளியில் பயிலும் சக மாணவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பமடைந்த நிலையில், மாணவனின் பெற்றோர், மாணவியை கருக்கலைப்பு செய்வதற்காக பள்ளிக்கு வந்த சீருடையுடன் கொடுமுடி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய மறுத்ததால், மாணவனின் உறவினரான கிளாம்பாடி பேரூராட்சி தலைவி அமுதா உதவியுடன் மாணவியை கருக்கலைப்பு செய்வதற்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களை அமர வைத்த மருத்துவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

கருக்கலைப்பு

அதன்பேரில் அங்கு வந்து விசாரணை நடத்திய மலையம்பாளையம் போலீசார், பள்ளி மாணவன், மாணவனின் தந்தை விஜய், தாய் கௌரி, கருக்கலைப்புக்கு அழைத்து சென்ற பேரூராட்சி தலைவி அமுதா (திமுக) மற்றும் சம்பவத்தை மறைக்க முயன்ற பள்ளி அலுவலக உதவியாளர் சிவகாமி ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து மாணவனும், பள்ளி ஊழியரும் தலைமறைவாகினர். இந்நிலையில், மாணவனின் பெற்றோர் மற்றும் பேரூராட்சி தலைவி அமுதா ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மாணவனையும், பள்ளி ஊழியரையும் போலீசார் தேடி வருகின்றனர்.