வட மாநில இளைஞர்களுக்குள் தகராறு- ஒருவர் அடித்துக்கொலை
சென்னை அடுத்த மாதவரத்தில் வட மாநில இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

மாதவரம் தட்டான்குளம் ரோடு மாதவரம் மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரில் வாடகை வீட்டில் ஐந்து நபர்களோடு வசித்து வருபவர் நீரலாகுமார் ( வயது 19). இவர் பீகார் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர். இங்கு தங்கி இருந்து அருகில் உள்ள அட்டை கம்பெனியில் சுமார் இரண்டு வருடத்திற்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று கம்பெனியில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு அவரவர்களுக்கு கம்பெனி மூலமாக பரிசுகள் வழங்கப்பட்டதில், கம்பெனி மேலாளர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் தொழிலாளர்கள் தனது வீடுகளுக்கு சென்று விட்டனர்.
வீட்டிற்கு சென்றதும் குடிபோதையில் ஒருவருக்கொருவர் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தங்கி இருந்த அறையில் இருந்த நான்கு பேர் திடீரென பீர் பாட்டிலால் மீரலா குமாரின் மண்டையில் அடித்தும் பாட்டிலை உடைத்து முகத்தில் குத்தியதால் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டது. இதனால் பயந்து அங்கிருந்து ஓடி தலைமறைவாகினர். தகவல் அறிந்த மாதவரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் நீரலா குமாரை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இது குறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நான்கு பேரை வலைவீசி தேடி வருகிறார்.

