நடுரோட்டில் கல்லூரி மாணவி குத்திக்கொலை! காதலன் வெறிச்செயல்

 
th

பட்டப் பகலில்  நடுரோட்டில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.   வீட்டின் அருகே நடந்து சென்ற போது மறைந்து நின்ற காதலன் அவரை குத்தி படுகொலை செய்துள்ளார்.

 விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தரணி . 19 வயதான இந்த இளம் பெண் சென்னையில் தனியார் கல்லூரியில் நர்சிங்  முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் இன்று காலையில் தனது வீட்டின் அருகே நடந்து சென்ற போது , ஒரு வாலிபர் அவரை சரமாரி குத்திவிட்டு ஓடி  இருக்கிறார்.  இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரை இழந்து இருக்கிறார் தரணி.

 தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் இளம்பெண் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.  போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரிய வந்திருக்கிறது. 

g

 போலீஸ் எஸ் பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொலையாளியை கைது செய்துள்ளனர்.  அவர் பக்கத்து ஊரான மதுரபாக்கத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபர் கணேசன் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

 போலீசார் கொலையாளியை தேடிச்சென்ற போது புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.   விக்கிரவாண்டி போலீசார் திருக்கனூரில் பதுங்கி இருந்த கணேசனை கைது செய்துள்ளனர்.  கொலையாளி இடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர். 

 கொலை நடந்த இரண்டு மணி நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரை காவல் நிலையம் அழைத்து  வந்து விசாரணை நடத்தியதில்,  கடந்த நான்கு ஆண்டுகளாக தரணியை காதலித்து வந்ததாகவும்,  ஒரு வருடமாக தன்னிடம் பேசுவதை தவிர்த்து வந்து விட்டார்  என்பதாலும் ஆத்திரத்தில் தரணியை கொலை செய்ததாக கூறியிருக்கிறார்.  

தரணி சென்னையில் படித்து வந்ததால் எப்போது வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்த்து இருந்து,  இன்று காலையில் வீட்டின் அருகே பதுங்கி இருந்தபோது,  இயற்கை உபாதைக்காக வீட்டை விட்டு வெளியே சென்ற போது திடீரென்று ஓடி வந்து கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

 தரணியும் கணேசனும் ஆரம்பத்தில் காதலித்து வந்தாலும் பின்னர் கஞ்சா , மதுவிற்கு அடிமையாகி கணேசன் பாதை மாறிப் போனதால் அவருடன் பேசுவதை தரணி தவிர்த்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

 தரணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து உறவினர்களும் ஊராரும் போலீசாரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் ராதாபுரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.