காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்- 12ஆம் வகுப்பு மாணவி சுட்டுக்கொலை
பீகாரின் சமஸ்திபூரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 12-ஆம் வகுப்பு மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கைஜியா கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ் தாக்கூர் என்பவரின் மகள் சோனம் குமாரி, திங்கட்கிழமை காலை பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சோனம் குமாரியை சுட்டுக் கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இந்தக் கொலை, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் குப்தா என்ற இளைஞர் மாணவியைச் சுட்டுக் கொன்றது தெரியவந்தது. குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் உதவி காவல் கண்காணிப்பாளர் பாண்டே தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரான சங்கீதா தேவி இதுகுறித்து கூறுகையில், “எனது மகளும் அந்த இளைஞரும் நட்பாக பழகிவந்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன் அரவிந்த் எனது மகளை காதலிப்பதாக கூறினார். அது எனது மகளுக்கு பிடிக்கவில்லை. இதனால் போனில் பேசுவது உள்ளிட்ட அவருடனான தொடர்பை துண்டித்தார். இருப்பினும் அரவிந்த் விடாமல் பின் தொடர்ந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை என்னை திருமணம் செய்துகொள்ளும்படி அரவிந்த் குப்தா கேட்டுள்ளார். ஆனால் சோனம் குமாரி அதற்கு மறுத்திவிட்டார். இதனால் கொலைவெறி ஆத்திரத்தில் இப்படி எனது மகளை கொலை செய்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

