செல்போனை திருடியதாக கூறியதால் ஆத்திரம்! அண்ணனை எரித்துக் கொன்ற தம்பி

 
murder

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கடந்த 19 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட வழக்கில்  தனது சொந்த சகோதரனையே நண்பர்களுடன் சேர்ந்து கட்டையால் அடித்து கழுத்தை அறுத்து கொலை செய்து எரித்துவிட்டு சென்ற தம்பியின் வெறிச்செயல் அம்பலமாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஒடப்பவிடுதி ஊராட்சி மகாராஜாசமுத்திரம் காட்டாறு அருகே கடந்த 8ம் தேதி அன்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் எரிந்த நிலையில் ரெகுநாதபுரம் காவல்துறையால் கைப்பற்றப்பட்டது. இதனைக் கைப்பற்றிய காவல் துறையினர் அடையாளம் தெரியாத ஆண் சடலம் யாருடையது? அவரை யாரேனும் கொலை செய்து எரித்தார்களா? வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை அமைத்து வழக்கை துரிதப்படுத்தினார். மேலும் கடந்த 15 தினங்களாக ரெகுநாதபுரம் காவல்துறையினரும் தனிப்படையினரும் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் எரிந்த நிலையில் சடலம் கைப்பற்றப்பட்ட பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் அதேபோல் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் இயங்கிய செல்போன் எண்களையும் கைப்பற்றி விசாரணையை முடுக்கி விட்டனர்.

அப்போது சடலம் மீட்கப்பட்ட நாளின் முதல் நாள் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் சென்றது சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகி இருந்த நிலையில் அந்த காட்சியில் பதிவாகி இருந்தது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவுக்கு உட்பட்ட கரிக்காடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் முகிலன் (21)  என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் முகிலனிடம் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவல்துறையினருக்கு முகிலன் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் கூடுதல் விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த விசாரணையில் தான் காவல்துறையினருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதில் முகிலன் தனது சொந்த அண்ணனான 23 வயதுடைய முல்லை வேந்தனை தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து கட்டையால் அடித்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பின்னர் அவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை பிடித்து அதனை வைத்து முல்லைவேந்தனின் சடலத்தை பனமட்டை உள்ளிட்டவற்றை வைத்து எரித்து விட்டு சென்றதும் தெரியவந்தது.

murder

மேலும் இந்த விசாரணையில் முகிலன் கூறுகையில் தனது அண்ணன் முல்லைவேந்தன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு தலையில் அடிபட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அப்போது தனது தந்தை முருகானந்தத்தை முல்லைவேந்தன் தீயிட்டு கொளுத்தி கொலை செய்து விட்டதாகவும் ஆனால் நாங்கள் அதுகுறித்து எந்த ஒரு புகாரும் கொடுக்காமல் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து விட்டதாகவும் இப்படி இருக்கையில் தனது அண்ணன் முல்லைவேந்தனை கொலை செய்த நாளிலிருந்து சில நாட்களுக்கு முன்பு முல்லைவேந்தனின் மொபைல் போனை யாரோ எடுத்து விட்டதாகவும் ஆனால் அந்த மொபைல் போனை தான் எடுத்து விட்டேன் என்று கூறி தனது அண்ணன் முல்லைவேந்தன் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் இந்நிலையில் தான் தன்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்ததால் தன்னையும் தனது தந்தை போல் எரித்து கொலை செய்து விடுவான் என்ற எண்ணத்தில் தனது அண்ணன் முல்லைவேந்தனை தீர்த்து கட்ட தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி இரு சக்கர வாகனத்தில் வைத்து தனது அண்ணனை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று மது குடிக்க வைத்ததாகவும் மேலும் ஏற்கனவே சம்பவம் நடந்த பகுதியில் விறகு உள்ளிட்டவற்றை கொண்டு சென்று வைத்திருந்த நிலையில் தனது அண்ணன் மதுவை குடித்து மது போதையிலிருந்த போது அவரது பின்னாலிருந்து கட்டையை வைத்து தலையில் அடித்து பின்னர் தனது நண்பர்கள் கையில் எடுத்து வந்திருந்த கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அதே பகுதியில் தனது அண்ணன் முல்லை வேந்தனின் சடலத்தை வீசி இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை பிடித்து பனமட்டை விறகு உளிட்டவற்றை வைத்து தனது அண்ணனை தீயிட்டு கொளுத்தி விட்டு சென்றதாகவும் கூறி காவல் துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.

பின்னர் காவல் துறையினர் முகிலனை கைது செய்து முகிலன் கொடுத்த தகவலின் அடிப்படையில் முகிலன் அண்ணன் முல்லைவேந்தனை கொலை செய்ய அவருக்கு உதவி செய்த அவரது கிராமத்தைச் சேர்ந்த அனீஸ்வரன் (19), ஒரத்தநாடு தாலுக்கா பொய்யாண்டார் கோட்டை  வாண்டையார் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் உட்பட இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஹரிதாஸ் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனை அடுத்து முல்லை வேந்தனை கொலை செய்த அவரது தம்பி முகிலன் முகிலனுக்கு உதவி புரிந்த அனிஸ்வரன் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரையும் ரெகுநாதபுரம் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.