இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க லஞ்சம்- பெண் விஏஓ கைது
துறையூர்அருகே இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவதற்கு ரூ. 7000 லஞ்சம் பெற்றதாக பெண் விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
துறையூர் அருகேயுள்ள மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வின் காந்த் மனைவி சத்தியா(34). இலவச வீட்டு மனைக் கோரி விண்ணப்பித்த சத்தியாவுக்கு இலவச வீட்டு மனை ஒதுக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பெற பச்சமலையில் நடைபெற்ற அரசு விழாவுக்கு கடந்த ஆக. 22 சத்தியா சென்ற போது அவருக்கு வழங்கப்படவில்லை.
அதன் பின்னர் மாராடியில் உள்ள விஏஓ சுமதியை அவரது அலுவலகத்தில் தொடர்பு கொண்டு சத்தியா கேட்டார். அப்போது ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேரம் பேசி இறுதியாக ரூ. 7 ஆயிரம் கொடுத்தால் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க முடியும் என விஏஓ சுமதி கூறியுள்ளார். இந்த நிலையில் பயனாளி சத்தியா திருச்சியிலுள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரை அணுகி புகாரளித்தார்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்த அறிவுறுத்தலின் படி சத்தியா நடந்து கொண்டு நேற்று விஏஓ சுமதியிடம் ரூ. 7 ஆயிரம் ரசாயணம் தடவிய பணத்தை வழங்கினார். அப்போது விஏஓ அலுவலகம் பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸார் விஏஓ சுமதியை கைது செய்த போலீஸார் அவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைதான சுமதிக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம் வாழப்பாடி ஆகும். பணிக் காரணமாக துறையூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளாராம். லஞ்ச ஒழிப்பு போலீஸார் விஏஓவைக் கைது செய்த சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பையும் வருவாய் துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.