சிறுவனை பைக்கில் கடத்தி சென்று பாலியல் தொல்லை
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இரவு பேருந்திற்காக காத்து நின்ற சிறுவனிடம் நைசாக பேசி இருசக்கர வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மீன்பிடி தொழிலாளி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதியில் இரவு டியூசன் முடிந்து வீடு செல்ல தனிமையில் பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் சிறுவர்களை குறி வைத்து நைசாக பேசி அழைத்து இருசக்கர வாகனத்தில் கடத்தி செல்லும் மர்ம நபர்கள் சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதாக புகார்கள் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவர்களின் எதிர்கால நலன் கருதி போலீஸாரிடம் புகாரளிக்காமல் தகவல் தெரிவித்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு டியூசன் முடிந்து சொந்த ஊரான திங்கள்சந்தை பகுதிக்கு செல்ல குளச்சல் வி.கே.பி பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்து நின்ற சிறுவனை மர்ம நபர் ஒருவர் நைசாக பேசி இருசக்கர வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்று ஆள் நடமாட்டமில்லாத கடற்கரை பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
மர்ம நபரின் பிடியில் இருந்து தப்பிய திங்கள்சந்தை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதான அந்த சிறுவன் சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் பெற்றோர் தைரியமாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனையடுத்து சிறுவனிடம் மர்ம நபரின் அடையாளகங்களை கேட்டறிந்த போலீஸார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அடுத்தடுத்த சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில் மர்ம நபர் கொண்டு வந்த சிகப்பு நிற பல்சர் என்.எஸ்.பைக்கை அடையாளம் கண்டு பைக்கின் உரிமையாளரான பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்த 39 வயது மீன்பிடி தொழிலாளியான அருள் ஆன்றோ சஜின் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குளச்சல் பகுதியில் பேருந்துக்காக காத்து நின்ற அந்த சிறுவனிடம் நைசாக பேசி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிய மீன்பிடி தொழிலாளியான அருள் ஆன்றோ சஜின் சிறுவனை இரவு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத கூட்டுமங்கலம் கடற்கரை பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் ஒத்துழைக்காத சிறுவனை கழுத்தை நெரித்து கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் அதன் பின் சிறுவன் அருள் ஆன்றோ சஜின் பிடியில் இருந்து தப்பியோடியதும் தெரியவந்தது மேலும் 5 க்கும் மேற்பட்ட சிறுவர்களை இதுபோன்று அழைத்து கடத்தி சென்று அதே பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ள அருள் ஆன்றோ சஜினுக்கு கோட்டார் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து அவரிடம் இருந்த பணத்தையும் பறித்து சென்றதாக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த அருள் ஆன்றோ சஜின் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் மகளிர் போலீஸார் அருள் ஆன்றோ சஜினை கைது செய்து சிறையிலடைத்தனர் மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும் என போலீஸார் தெரிவித்துள்ள நிலையில் மீன்பிடி தொழிலாளியான அருள் ஆன்றோ சஜின் சிறுவனை இருசக்கர வாகனத்தில் கடற்கரை பகுதிக்கு கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


