வழிப்பறி கும்பலால் குத்திக் கொல்லப்பட்ட பீகார் இளைஞர்! திகிலில் திருப்பூர்

 
rob

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து கணியாம்பூண்டி பகுதியில் உள்ள பனியன் கம்பனியில், பீகார் மாநிலம், சோன் பார்ஷா மாவட்டத்தை சேர்ந்த புகார் பஷ்வான், சீத்தாமாரியின் மகன், ஆகாஷ்குமார் (22), கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வந்தார்.  இவர், அதே பகுதியில் உள்ள வீட்டில் தங்கிக் கொண்டு தினமும் வேலைக்கு நடந்து சென்று வந்தார்.

திருப்பூர் கொலை

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணி முடித்து வீட்டுக்கு நடந்து செல்லும்போது வழியில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள், ஆகாஷ்குமாரை வழிமறித்து செல்போனை கேட்டு மிரட்டியுள்ளனர். செல்போனை தர மறுத்ததால், வழிப்பறி செய்ய வந்தவர்களில் ஒருவன் வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆகாஷ்குமாரின் இடது புற வயிற்றின் அடிப்பகுதியில் குத்தி செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து பலத்த காயத்துடன் வீட்டிற்கு நடந்தே சென்று தனது கம்பெனி மேலாளரான சுரேஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார் ஆகாஷ்குமார். உடனடியாக வந்த மேலாளர், பலத்த காயம் பட்ட ஆகாஷ்குமாரை கார் மூலம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஆகாஷ் குமார் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை உயிரிழந்தார். 
     
இந்த விவகாரத்தில், கொலை சம்பவத்தை கண்டித்து அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் நிறுவன வளாகத்திற்குள் ஒன்று கூடி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என திருமுருகன்பூண்டி போலீசார் உறுதி அளித்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சமாதானம் அடைந்தவர்களை அம்மாபாளையத்தில் உள்ள மின்மயானத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வைத்தனர்.

Robbery
     
இதையடுத்து, உதவி ஆய்வாளர் முருகேசன், முதல் நிலை காவலர் பார்த்திபன், காவலர்கள் மணிகண்டன் மற்றும் மணி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கொலை குறித்து ஆகாஷ்குமாரின் செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன் அடிப்படையில் திருப்பூர், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த வரதராஜன் மகன் பிரவீன்குமார் (19), சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் பாண்டியராஜன் (19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இளம் சிறார் ஒருவன் உட்பட மூன்று பேரை கண்டுபிடித்து, பிரவீன்குமார் மற்றும் பாண்டியராஜனை கைது செய்தும் இளம் சிறாரை அழைத்துக்கொண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். மேலும், இளம்சிறாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை இளம் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அனுமதிக்கவுள்ளனர். இதில் பிரவீன்குமார் மீது சென்ட்ரல் நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், பாண்டியராஜன் மீது 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது.