மெரினா கடற்கரையில் உச்சக்கட்ட பரபரப்பு! ஆட்டோ டிரைவரை வெட்டி சாய்த்த கும்பல்
சென்னை மெரினாவில் ஆட்டோ டிரைவர் அந்தோணி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா நொச்சிக்குப்பம் எதிரே உள்ள மணல் பரப்பில் இன்று அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த மெரினா போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த நபரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இன்று காலை 7:30 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டில் அந்தோணி என இருந்தது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கீழ்பாக்கம் சாஸ்திரி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அந்தோணி (வயது 33) என்பது தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது எனவும் தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்திருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை தொடர்பாக பெண் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


