மனைவியின் தங்கை வீட்டில் குண்டு வீச்சு! துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சி

 
மனைவியின் தங்கை வீட்டில் குண்டு வீச்சு! துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தனது மனைவியின் தங்கை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதுடன் கைதுப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மனைவியின் தங்கை வீட்டில் குண்டு வீச்சு! துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கரு.தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி கவிதா (40). கவிதாவிற்கும் திருச்சி விமான நிலையம் அருகே அவனியா நகர் பகுதியைச் சேர்ந்த கவிதாவின் அக்கா கணவரான பாலசேகர் என்பவருக்கும் கள்ளக்காதல் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலசேகர் தனது மனைவியின் தங்கையான கவிதாவிற்கு புதுக்கோட்டை அடுத்த மேட்டுப்பட்டி அருகே ரூபாய் 60,000 செலவு செய்து ஸ்ரீ சாய் என்ற பெயரில் ஜவுளிக்கடை வைத்து கொடுத்துள்ளார். 

இதையடுத்து அந்தக் கடை வைத்ததற்கு செலவு செய்த தொகையை வட்டியுடன் தர வேண்டும் என்று பாலசேகர் கவிதாவின் வீட்டிற்கு சென்று கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது கவிதா மட்டும் வீட்டில் இருந்ததால் பாலசேகருக்கும் கவிதாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாலசேகர் மற்றும் பாலசேகர் உடன் வந்த இரண்டு நபர்களும் பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி பெட்ரோல் குண்டாக தயாரித்து கவிதா வீட்டில் உள்ள கோழி கிடாப்பில் வீசி உள்ளனர். அப்போது அந்தப் பெட்ரோல் குண்டு எரியாததால் மற்றொரு பெட்ரோல் குண்டை எடுத்து கவிதா வசிக்கும் கூரை வீட்டில் முன்பு உள்ள திண்ணையில் வீசியுள்ளனர். 

இதனால் அவரது வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து கவிதா பற்றிய தீயை தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளார். பின்னர் இந்த சத்தம் கேட்டு கவிதாவின் வீட்டு அருகே வசிக்கும் ராணி கவிதா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த பாலசேகரை பிடித்து அங்கிருந்து கிளம்பும்படி தள்ளிச் சென்றபோது பாலசேகர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சிறிய அளவிலான கை துப்பாக்கியால் கவிதாவை சுட முயன்ற போது இதைப் பார்த்த ராணி துப்பாக்கியை தட்டி விட்டபோது துப்பாக்கி குண்டு வானத்தை நோக்கி சென்றுள்ளது. 

இதையடுத்து பாலசேகர் மற்றும் அவருடன் வந்த இருவரும் அங்கிருந்து காரில் தப்பி சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த கவிதாவின் கணவர் சுப்பிரமணியிடம் நடந்தவற்றை எடுத்து கூறிய நிலையில், பின்னர் கவிதா மற்றும் அவரது கணவர் சுப்பிரமணி ஆகியோர் உடனடியாக வடகாடு காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி பாலசேகர் மற்றும் அவருடன் வந்த இருவர் மீது புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கவிதாவின் கூரை வீட்டில் பற்றிய தீயை முறையாக அணைக்காததால் தீ மளமளவென பிடித்து வீடு முழுவதும் எறிந்துள்ளது.

இதனை அடுத்து அருகே இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். பின்னர் கவிதா கொடுத்த புகாரை தொடர்ந்து வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பாலசேகர் மற்றும் அவருடன் வந்த இருவரை தேடி வந்தனர். மேலும் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் ஐந்து பேர் கொண்ட தனிப்படை போலீசார் பாலசேகர் மற்றும் அவரிடம் வந்த இருவரை தேடி வந்த நிலையில், பாலசேகரை திருச்சியில் வைத்து கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடம் இருந்த சிறிய வகை கைதுப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்து வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

பின்னர் வடகாடு போலீசார் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாலசேகரை புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் பாலசேகருடன் கவிதா வீட்டிற்கு சென்ற  திருச்சி மாவட்டம் கோட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த குமார் உள்ளிட்ட இருவரை வடகாடு மற்றும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.