நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறு- இளைஞர் வெட்டி கொலை

 
murder

சோழவரம் அருகே நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

murder

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பெருமாள்அடி பாதம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (24). பைக் மெக்கானிக், வாகனங்களுக்கு பஞ்சர் போடும் வேலை செய்து வந்த வெங்கடேசன் சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். அண்மையில் திருட்டு, வழிப்பறி வழக்குகளில் கைதான வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். 

நரேஷ்குமார் என்பவருடன் 3 வருடங்களாக சண்டையிட்ட வெங்கடேசன், அண்மையில் மீண்டும் நட்போடு பழகி வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு இவர் தமது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த பிறகு வெங்கடேசனுக்கு நண்பர்களிடம் இருந்து போன் வந்துள்ளது. அப்போது போதையில் இருதரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் வெங்கடேசனை அவரது நண்பர்கள் சண்டைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. 

அண்ணன் தனியாக சண்டைக்கு செல்வதால் அவரை பாதுகாப்பதற்காக அவரது தம்பி சிவாவும் சென்றுள்ளார். வெங்கடேசன் முதலில் நரேஷ்குமாரை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து வீடு நோக்கி வந்துள்ளார். அப்போது எதிரே வந்த உறவினர்களை பார்த்த வெங்கடேசன் நண்பர்களுடன் சண்டை போட்டுள்ளதாகவும், அவர்கள் வீட்டிற்கு வரலாம் எனவும் கூறியுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்துவந்த அவரது நண்பர்கள், வெங்கடேசன் கொண்டு வந்த கத்தியை பிடுங்கி, அவரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வெங்கடேசனின் பாதுகாப்பிற்காக வந்த அவரது தம்பி சிவாவையும் வெட்டினர்.இதில் சிவாவிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 

திருமணத்தை மீறிய உறவால் கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து : கணவன் உள்பட இருவர் கைது!

நண்பர்களுக்குள் ஏற்பட்ட சண்டை குறித்து ஏற்கனவே உறவினர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் வெட்டு காயங்களுடன் உயிரிழந்த வெங்கடேசன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சோழவரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதே பகுதியில் இருந்த வெங்கடேசனின் நண்பர்களான நரேஷ்குமார், தினேஷ், லோகேஷ் ஆகிய மூவரை பிடித்து சோழவரம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.