அதிமுக நிர்வாகி நடுரோட்டில் ஓடஓட வெட்டிக்கொலை

அதிமுக நிர்வாகியை திருவெறும்பூர் அருகே நடுரோட்டில் ஓடஓட விரட்டி சரமாரி வெட்டி படுகொலை செய்து உள்ளனர். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர் அடுத்த வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு. இப்பகுதியைச் சேர்ந்தவர் கோபி. 32 வயதான இந்த வாலிபர் அதிமுக நிர்வாகி. நேற்று இரவு இவர் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் ஒரு ஓட்டலில் டிபன் ஆர்டர் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். சிறிது நேரம் கழித்து உணவை வாங்கிச் செல்ல வந்தபோது மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி இருக்கின்றார்கள்.
அவர்களிடம் இருந்து கோபி தப்பித்து ஓடி இருக்கிறார். பின்னால் துரத்திச்சென்று வழிமறித்த அந்த கும்பல் நடுரோட்டில் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.