குடிக்க தண்ணீர் கேட்ட வடமாநில இளைஞர் அடித்து கொலை
திருவள்ளூர் அருகே குடிக்க தண்ணீர் கேட்டு சென்ற வட மாநில இளைஞரை அப்பகுதி மக்கள் அடித்து கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராமராஜன் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரவி. இவர் விவசாய வேலைக்கு சென்று இருந்த நிலையில்ம் வீட்டில் அவருடைய மகள் ஷர்மிளா, அவருடைய தங்கை இருந்து வந்துள்ளனர். அப்போது அந்த வீட்டிற்கு வந்த வட மாநில இளைஞர் ஒருவர் மது போதையில் கேட்டில் நின்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவர் மது போதையில் இருந்ததால் அவர்கள் பயந்து தண்ணீர் கொடுக்காமல் கேட்டை பூட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளனர். பிறகு அந்த நபர் தான் வைத்திருந்த சிறிய கத்தியை கொண்டு கேட்டை கத்தியால் தட்டி உள்ளார். இதனால் பதறிப் போன ஷர்மிளா தனது கணவருக்கு செல்போனில் தகவல் கூறியுள்ளார்
ஷர்மிளா கணவர் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து 20க்கும் மேற்பட்டோர் உடன் வந்த அவர், அந்த வடமாநில இளைஞரை கைகளை கட்டி சரமாரியாக தாக்கி அடித்துள்ளனர். பின்னர் அவர் அங்கேயே மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். வெங்கல் போலீசாருக்கு தகவல் தெரிய வரவே அங்கு சென்ற அவர்கள் வடமாநில இளைஞர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ப்ரோசெங்கிடோஸ் (வயது35) என்ற தொழிலாளி என்பதும், அவர் வேலை தேடி நண்பர்களுடன் தாமரைப்பாக்கம் அம்மணம்பாக்கம் பகுதியில் தங்கி வருவதும் தெரியவந்துள்ளது. வட மாநில இளைஞரை அடித்து கொலை செய்த வழக்கில் பெண்ணின் தந்தை ரவி (59), சிவா (47), ஜெயக்குமார் (35) ஆகிய மூவரை வெங்கல் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

