குடிபோதையில் தகராறு செய்த கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி

 
murder

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தளி அருகே, குடும்பத் தகராறில் கணவனை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

murder

தளி அடுத்த முத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாச ரெட்டி (48), கூலித் தொழிலாளி. இவரது மனைவி நவீனா (38). பிரகாச ரெட்டிக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவு  வழக்கம்போல மதுபோதையில் வீட்டிற்கு வந்த பிரகாஷ் ரெட்டி, "வீட்டிற்குள் யார் இருக்கிறார்கள்?" எனக் கேட்டு நவீனாவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் தகராறு முற்றவே, நவீனாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, அவரது மாமியார் பார்வதம்மா வீட்டின் முன்பு வைத்து கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. கணவனின் தொடர் சித்திரவதையால் ஆத்திரமடைந்த நவீனா, தற்காப்புக்காக அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து பிரகாஷ் ரெட்டியைத் தாக்கியுள்ளார். இதில் அவரது தலை, மூக்கு மற்றும் வாய் பகுதிகளில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது.

படுகாயமடைந்த பிரகாச ரெட்டியை உறவினர்கள் மீட்டு, கர்நாடக மாநிலம் ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். தற்போது அவரது உடல் ஆனைக்கல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக முயன்ற பிரகாஷ் ரெட்டியின் மனைவி நவீனாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலை தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் முத்தூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.