பெண் குழந்தை பெற்றெடுத்த பள்ளி மாணவி! 65 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை

 
x

 16 வயது பள்ளி மாணவி பெண் குழந்தை பெற்றெடுத்த வழக்கில்  மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான 65 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நாமக்கல் மகிளா நீதிமன்றம்.

 நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் அருகே இருக்கும் சீராப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து.  65 வயதான இந்த முதியவர் அந்தப் பகுதியில் உள்ள விலை நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார்.

விவசாயம் செய்து வந்தபோது   அந்தப் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி இடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.   அந்த மாணவி பயந்து கொண்டு யாரிடமும் சொல்லாமல் இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்  வீரமுத்து.  

l

இதனால், கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அன்று அந்த பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.  நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி அனுப்பி இருக்கிறார்.   வீட்டிற்கு சென்ற சிறுமி அது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.  இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார். 

தான் கர்ப்பமாக இருக்கும் விபரத்தை பெற்றோரிடம் சொல்லாமல் இருந்து வந்திருக்கிறார்.   இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.   அதன் பின்னர் சிறுமியின் தாய் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

 புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்த தனது கர்ப்பத்திற்கு காரணம் முதியவர் வீரமுத்து தான் என்று சொல்ல அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மற்றும் கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்திருந்தனர்.   நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.   இந்த வழக்கின் விசாரணை முழுவதும் முடிவடைந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. 

 மாணவியை கர்ப்பம் ஆக்கிய முதியவர் வீரமுத்துவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது நாமக்கல் மகிளா நீதிமன்றம்.  மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.