கள்ளக்காதலி உட்பட இருவரை வெட்டிவிட்டு அரிவாளுடன் போலீசில் சரணடைந்த நபர்

 
கள்ளக்காதலி உட்பட இருவரை வெட்டிவிட்டு அரிவாளுடன் போலீசில் சரணடைந்த நபர்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கூலி தொழிலாளி  இருவரை வெட்டிக் கொன்று விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முசிறியில் இன்று இரட்டைக்கொலை- தொழிலாளி வெறிச்செயல்

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் வாளவந்தி கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 64). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2003- ஆம் ஆண்டு தாய், மகனை வெட்டி கொன்றார். இந்த வழக்கில் 15 வருடம் சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை ஆன நிலையில் மனைவி, மக்கள் யாரும் இன்றி தனிமரமாக வசித்து வந்தார். முசிறி பகுதியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

முசிறி  அந்தரப்பட்டி  பாரதி நகரை சேர்ந்த வளையல் வியாபாரியான முருகேசன் என்பவரது மனைவி கீதா(வயது 44) கணவன், மனைவி இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து  தனது குழந்தைகளோடு தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் பாலச்சந்திரனுக்கும், கீதாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கீதா, பாலச்சந்திரன் உடனான தொடர்பை தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலச்சந்திரன் இன்று காலை கீதாவின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்று தன்னுடன்  பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பாலச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால்  கீதாவை வெட்டி  விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கீதாவை அருகில் இருந்தவர்கள் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு கீதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். 

murder

கீதாவை வெட்டிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிய பாலச்சந்திரன் முசிறி அருகே உள்ள ஜெம்புநாதபுரம் என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த ரமேஷ் (55) என்பவரை அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் ரமேஷ் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து பாலச்சந்திரன் அருகில் இருந்த ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரண்டர் ஆனார். போலீஸ் விசாரணையில் கோயில் நிலம் ஒன்றை  ரமேஷ் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், அதனை அகற்றுமாறு பலமுறை சொல்லியும் அகற்றவில்லை என்ற ஆத்திரத்தினால் ரமேஷை வெட்டியதாக போலீசில் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் இரு வேறு இடங்களில் இருவரை ஒரே நபர் வெட்டி கொலை செய்த சம்பவம் முசிறி பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.