கொலை செய்து வயிற்றை கிழித்து கருங்கல்லை வைத்து ஆற்றில் வீசப்பட்ட ஆண் சடலம்

பவானி அருகே காவிரியாற்றில் கொலை செய்யப்பட்டு வயிற்றை கிழித்து கருங்கல்லை வைத்து ஆண் சடலம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜல்லிகல் மேடு, மயானம் அருகே உள்ள காவேரி ஆற்றங்கரையோரம் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஆற்றில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு பார்த்தபோது, வயிற்றுப் பகுதி கிழிக்கப்பட்டு, வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் கருங்கல்லை வைத்து உள்ளனர், மேலும் பாக்கெட் பகுதியில் ஒரு செங்கலும் வைத்து இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து இறந்த நபர் யார்? அவர் எங்கு கொலை செய்யப்பட்டார் ? இப்பகுதியிலேயே கொலை செய்து கொண்டு வந்து வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதோ ஒரு பக்கம் ஆற்றில் வீசப்பட்டு ஆற்று தண்ணீரில் இங்கு அடித்து வரப்பட்டதா? என்பது குறித்து பவானி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த நபருக்கு சுமார் 35 வயது இருக்கும் என்று தெரிவித்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.