“கணவன், குழந்தைகளுக்கு ஆபத்து”- செய்வினை எடுப்பதாக கூறி பெண்ணிடம் 4 சவரன் நகையை பறித்து சென்ற குடுகுடுப்பைக்காரர்
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி பத்தாயிரம் 4 சவரன் நகை, பறித்த குடுகுடுப்பைக்காரர் கைது செய்யப்பட்டார்.
திருவான்மியூர் மேட்டு தெருவில் வசிப்பவர் தனியார் நிறுவன பணியாளர் சதீஷ்குமார். இவரது மனைவி மஞ்சு(40) நேற்று முன்தினம் காலை சுமார் 10 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 50 வயது மதிக்கத்தக்க ஒரு குடுகுடுப்பைக்காரர், வீட்டில் தனியாக இருந்த மஞ்சுவிடம் உங்கள் வீட்டிற்கு கெட்ட நேரம் வந்துவிட்டது . உங்கள் குடும்பத்துக்கு செய்வினை வைத்துள்ளனர்.உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டவுடன் மஞ்சு அதிர்ச்சிஅடைந்துளளார்.
மாந்திரீகம் செய்து செய்வினையை எடுத்து விடுகிறேன். ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என மஞ்சு பதில் அளித்துள்ளார். அப்போது ஒரு கயிறை மஞ்சுவின் கையில் கட்டி விட்டு, 20 ஆயிரம் பணம் வேண்டும் என அந்த நபர் கேட்டுள்ளார். உடனே மஞ்சு தன்னிடமிருந்த பத்தாயிரத்தை கொடுத்துள்ளார். பின்னர் அந்த நபர் இது போதாது நகைகள் வேண்டும் எனக்கூறி, மஞ்சு கையில் அணிந்திருந்த வளையல் மற்றும் காதணிகள் என 4 சவரன் நகைகளை வாங்கியுள்ளார். சுடுகாட்டிலும், உங்கள் தெரு முனையிலும் நின்று சில மாந்திரீக வேலைகள் செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து நகையை கொடுத்து விடுவேன் என கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் குடுகுடுப்பைக்காரர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் மாலையில் வீடு திரும்பிய கணவரிடம், குடுகுடுப்பைக்காரரிடம் நகை ,பணம் கொடுத்தது ஏமாந்தது தொடர்பாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கணவருடன் சென்று திருவான்மியூர் காவல் நிலையத்தில் மஞ்சு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் கொட்டிவாக்கத்தில் சுற்றித்திரிந்த குடுகுடுப்பைக்காரர் பாலமுருகன் (வயது 50) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் கொட்டிவாக்கத்தில் தங்கி சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு இதே போல கைவரிசை காட்டியவர் என்பது தெரியவந்தது.


