குடிக்க பணம் கேட்டு தராத மனைவியை கொலை செய்து பெட்டியில் அடைத்த கணவன்

 
குடிக்க பணம் கேட்டு தராத மனைவியை கொலை செய்து பெட்டியில் அடைத்த கணவன்

ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் மதுபானம் வாங்குவதற்காகப் பணம் தர மறுத்த தனது மனைவியை, ஒருவர் அடித்துக் கொன்று, அவரது உடலை ஒரு இரும்புப் பெட்டியில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

சூரஜ்கர் அருகே வசித்துவருபவர் கிருஷ்ண குமார் ஜாட் (40). இவரது மனைவி சுலோச்சனா (34). இவர்களுக்கு 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கிருஷ்ண குமார்  குடிக்க பணம் கேட்டு, அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ண குமார் ஜாட், சுலோச்சனாவை கொடூரமாக தாக்கினார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உடனே குற்றத்தை மறைப்பதற்காக, அப்பெண்ணின் கைகளைக் கட்டி, உடலை வீட்டிற்குள் இருந்த ஒரு இரும்புப் பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார் கிருஷ்ண குமார். நான்கு நாட்களுக்குப் பிறகு, துர்நாற்றம் வீசத் தொடங்கியபோது, ​போதையில் கிருஷ்ணகுமார் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் இதுகுறித்த தகவலை கூறியுள்ளார். இதன்மூலம் காவல்துறைக்கு இந்த குற்றம் தெரியவந்தது. உடனே பூட்டப்பட்ட பெட்டிக்குள் இருந்த சடலத்தை மீட்ட போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து கிருஷ்ண குமாரை கைது செய்தனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் கிருஷ்ணகுமார்- சுலோச்சனா தம்பதியரின் 16 வயது மகன் வீட்டில் இல்லை என்று காவல்துறை தெரிவித்தது. அவன் திரும்பி வந்தபோது, ​​அவனது தாய் எங்கோ சென்றிருப்பதாக அவரது தந்தை கூறியதை அச்சிறுவன் நம்பியதாக தெரிகிறது. விசாரணையில் கிருஷ்ண குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.