10 ஆண்டுகளாக காதலித்துவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம்! விடிய விடிய காதலி தர்ணா

 
காதலி

பண்ருட்டியில் விடிந்தால் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்த நிலையில், காதலி வீட்டு முன்பு இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமண மாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஆர்.எஸ். மணிநகரைச் சேர்ந்தவர் சக்கரபாணி மகன் சுப்ரமணியன்(31). மெக்கானிக்கான இவரும், எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த ரம்யா (29) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து தனிமையில் ஊர் சுற்றி வந்துள்ளனர். இதில் ரம்யா பலமுறை கர்ப்பமாக இருந்து கலைத்து உள்ளார். இந்த நிலையில் சுப்பிரமணியன் கடந்த 22ஆம் தேதி விழுப்புத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் விழுப்புரத்தில் அறை எடுத்து தங்கி தனிமையில்  இருந்துள்ளனர்.

தற்போது சுப்ரமணியனுக்கு கடலூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டு இன்று காலை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதனை அறிந்த ரம்யா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இரவு முழுக்க காதலன் வீட்டு முன்பு வாசலில் அமர்ந்து ரம்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

இன்று அதிகாலையில் திருமணம் நடக்க இருந்த நிலையில், காதலன் வீட்டு முன்பு காதலி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் திருமணத்தை நிறுத்த திருவந்திபுரம் சென்றனர். ஆனால் காவல்துறையினர் செல்லும் முன்பே சுப்ரமணியன் வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டியது தெரியவந்தது. இருந்தாலும் காவல் துறையினர்  மணக்கோலத்தில் இருந்த சுப்பரமணியனை கைது செய்தனர். காதலித்து திருமணம் செய்த பெண்ணை கைவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த சுப்பிரமணியத்தால் இரண்டு பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாகி உள்ளது.