கணவன் - மனைவி இடையே தகராறு... தடுக்க சென்ற பெண் கொலை

 
கொலை

குடிபோதையில் வந்த கணவரிடம் ஏற்பட்ட தகராறில் மனைவியின் தங்கை உயிரிழந்தது நிலையில், மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பவானி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் பவானி மண் தொழிலாளர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (எ) செல்வராஜ் (55). இவரது மனைவி ஜோதிமணி (50). கலைச்செல்வன் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்நிலையில்  இன்று மாலை கலைச்செல்வன் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கலைச்செல்வனுக்கும் அவரது மனைவி ஜோதிமணி மற்றும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு குறித்து ஜோதிமணி வீட்டின் அருகே வசிக்கும் அவரது தங்கையான கல்பனாவிற்கு (40) தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.


உடனடியாக கல்பனா தனது அக்காவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்த அக்காவின் கணவரான கலைச்செல்வனிடம் ஏன் இவ்வாறு தகராறில் ஈடுபடுகிறீர்கள் என கேட்டுள்ளார். உடனடியாக கலைச்செல்வன் நீ யார் இதை கேட்பதற்கு எனக் கூறி அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து கல்பனாவை குத்தியுள்ளார். இதனைப் பார்த்த ஜோதிமணி தடுக்க சென்றபோது ஜோதிமணியையும் கலைச்செல்வன் குத்தியுள்ளார். இதில் அக்கா, தங்கை இருவரும் சுருண்டு விலவே உடனடியாக இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கல்பனா உயிரிழந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து ஜோதிமணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


இதற்கிடையே குடிபோதையில் கத்தியால் மனைவி மற்றும் மனைவியின் தங்கையை குத்திய கலைச்செல்வனை அவரது உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் ஏற்பட்ட வரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.