தங்கையை நண்பரின் வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்

தங்கையை நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டி வந்த அண்ணனை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லன் விளை பகுதியைச் சேர்ந்தவர் பிபின் பிரியன். 29 வயதான இந்த வாலிபருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இவர் மீது ஆறு குற்ற வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலில் உள்ள இவர் பிரபல அரசியல் பிரமுகருக்கு கார் டிரைவராக வேலை செய்து வந்திருக்கிறார்.
தான் வசித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த தனது பெரியப்பா மகளிடம் தொடர்ந்து பேசி பழகி வந்திருக்கிறார். உடன் பிறந்த சகோதரர்கள் இல்லாத அந்த பெண் பிபினை தனது அண்ணனாக நினைத்து பழகி வந்திருக்கிறார். பொறியியல் படித்து முடித்த அந்தப் பெண்ணை கல்வி நிலையங்களுக்கு தனது பைக்கில் அழைத்துச் சென்று வந்திருக்கிறார் பிபின்.
கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி அன்று ஆலங்காடு பகுதியில் இருக்கும் வீட்டிற்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக காரில் வந்த பிபின் வீட்டில் அழைத்துச் சென்று விடுவதாகச் சொல்ல காரில் ஏறிக் கொண்டிருக்கிறார். ஆனால் தங்கையின் வீட்டில் அழைத்துச் செல்லாமல் நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் . அண்ணன் தான் என்பதால் நம்பிக்கையுடன் அவருடன் சென்று இருக்கிறார் அந்த இளம் பெண்.
அங்கே குளிர்பானம் கொடுத்திருக்கிறார் பிபின். தனது அண்ணன் என்பதால் நம்பிக்கையுடன் எந்தவித அச்சமும் இல்லாமல் குளிர்பானத்தை குடித்திருக்கிறார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததால் மயக்கம் அடைந்திருக்கிறார். அப்போது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் பிபின். அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு தங்கைக்கு அனுப்பி இதை வலைத்தளங்களில் பரப்பாமல் இருக்க வேண்டும் என்றால் நான் கூப்பிடும் போதெல்லாம் வர வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார்.
இதற்கு அந்த இளம் பெண் மறுக்கவும், வராவிட்டால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி வந்திருக்கிறார். இதனால் பயந்து போன அந்த இளம் பெண் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று பிபின் பேசிய மிரட்டல் ஆடியோவுடன் புகார் அளித்திருக்கிறார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி பிபினை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.