திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று எரித்த காதலன்

 
ந் ந்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வனப்பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டார். 

ச்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி உள்ளது. கன்னிவாடியில் இருந்து ஆடலூர் பன்றிமலை செல்லக்கூடிய சாலையில் அமைதி சோலை என்ற இடத்தின் அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை செல்கிறது. நீரோடையின் அருகே அருகே கடந்த (13.04.25 அன்று 25 வயது முதல் 30 மதிக்கத்தக்க  அடையாளம் தெரியாத பெண்ணின் உடல்  பாதி எரிந்த நிலையில் இருப்பதாக அப்பகுதியில்  கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கன்னிவாடி காவல்நிலையத்திற்கு  தகவல் அளித்தனர்.


உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கன்னிவாடி காவல் துறையினர் பாதி உடல் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார், எந்த ஊர், பெயர் என்ன, திருமணம் ஆனவரா, ஆகாதவரா, என்று தெரியாத நிலையில், கன்னிவாடி காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்பொழுது இறந்த இளம்பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலை செய்து எரிக்கப்பட்டாரா அல்லது வேறு இடத்தில் கொலை செய்து எரிப்பதற்காக  இங்கு கொண்டுவரப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கிராமங்களில்  வைக்கப்பட்டிருக்கும்  சிசிடிவி கேமராக்களை காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.


இறந்து போன பெண்ணின் போட்டோவை போட்டும் அந்த பெண்ணின் கையில் ஆறு விரல்கள் உள்ளது என திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கும் மற்றும் பொது இடங்களில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். இதனைப் பார்த்த அந்தப் பெண்ணின் காதலன் பிரவீன் தான் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக தானாக முன்வந்து கன்னிவாடி காவல் நிலையத்திற்குச் சென்று தனது காதலியை கடந்து சில தினங்களாக காணவில்லை என்றும், தனது காதலியின் கையில் ஆறு விரல்கள் உண்டு என்றும் இறந்த பெண் தனது காதலியாக இருக்க வாய்ப்பு உள்ளது என சந்தேகப்படுவதாக கூறினார்.

ச்

பிரவீன் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தங்களது பாணியில் பிரவீனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது பிரவீன் அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.மதுரையை சேர்ந்தவர் மாரியம்மாள்,  இவருக்கு பெற்றோர் கிடையாது. அனாதையான மாரியம்மாள் மதுரைசக்தி விடியல் ஆசிரமத்தில்  வளர்ந்து வந்தார். பனிரெண்டாம் வகுப்பு முடித்த பின்பு மதுரையில் வேலை செய்துள்ளார். அப்பொழுது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எமக்களாபுரத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர் உடன் மாரியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் பிரவீன் மற்றும் மாரியம்மாள் இருவரும் இணைந்து திண்டுக்கல் உள்ள தனியார் துணிக்கடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். மாரியம்மாள் தனியார் விடுதியில் தங்குவதற்காக பாதுகாவலர் என கையெழுத்து போட்டு விடுதியில் மாரியம்மாளை பிரவீன் தங்க வைத்துள்ளார்.


கடந்த ஒரு வருடமாக திண்டுக்கல் இருவரும் ஒன்றாக வேலை பார்த்து ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளனர். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக இரண்டு முறை மாரியம்மாள் கருவுற்றதாகவும் பின்னர் கரு கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாரியம்மாள் அடிக்கடி பிரவீனை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதை ஏற்காத பிரவீன் காதலி மாரியம்மாளை அமைதிச் சோலை பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். அடுத்தநாள் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிரவீனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.