கணவர், மகனை தவிக்கவிட்டு 2வது கணவருடன் டூர் போன மகளை வெட்டிக்கொன்ற தந்தை

 
b

 இரண்டாவது திருமணம் செய்ததால் மகளை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார் தந்தை. 

 தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீ வைகுண்டம் அடுத்த தாதன்குளம் கிராமம்.   இக்கிராமத்தில் கருப்பசாமி கோவில் கொடை விழா நேற்று நடந்தது.  கடந்த 14 வருடங்களுக்குப் பின்னர் இந்த திருவிழா நேற்று நடந்தது.   இதை முன்னிட்டு ஊரைச் சேர்ந்த பலரும் திருவிழாவிற்காக கிராமத்திற்கு வந்திருந்தனர். 

 தாதன்குளத்தைச் சேர்ந்த சுடலைமுத்துவின் மகள் மீனாவும் கோவில் திருவிழாவுக்காக சித்தியின் வீட்டிற்கு வந்திருக்கிறார்.  இரவு 9 மணிக்கு சித்தி வீட்டில் இருந்தபோது மீனாவின் தந்தை சுடலைமுத்து உள்பட ஐந்து பேர் அரிவாளுடன் வந்து மீனாவை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கிறார்கள்.   சம்பவம் குறித்து அறிந்த செய்துங்கநல்லூர் போலீசார் தாதன்குளம் வந்து மீனாவின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

bn

 சுடலைமுத்து தற்போது பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார்.   இவரது மகள் மீனாவுக்கு சில வருடங்களுக்கு முன்னர் கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த இசக்கி பாண்டியன் என்பவருக்கு திருமணம் நடந்து இருக்கிறது.   இவருக்கு நிஷாந்த் என நாலு வயதில் மகன் உள்ளார்.  இந்த நிலையில் இசக்கி பாண்டியனுக்கு மீனாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீனா பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.  

 கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த மீனா,   நாங்குநேரி அடுத்த பட்ட பிள்ளை புதூரைச் சேர்ந்த முத்து என்பவரை கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார்.   இருவரும் பாளையங்கோட்டையில் தனி வீடு எடுத்து வசித்து வந்திருக்கிறார்கள். 

 மகள் மீனா இரண்டாவது திருமணம் செய்ததை கேள்விப்பட்ட சுடலைமுத்து ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.   முதல் கணவரையும் மகனையும் தனிமையில் விட்டு இரண்டாவது கணவருடன்  சுற்றுலா சென்று அதை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு வந்தது கண்டு ஆத்திரம் அடைந்திருக்கிறார்.   கோவில் திருவிழாவிற்காக சித்தி வீட்டிற்கு சென்றிருக்கும் தகவல் அறிந்து அங்கே சுடலைமுத்து தனது உறவினர்களுடன் சென்றிருக்கிறார்.

 இரண்டாவது திருமணம் ஏன் செய்தாய் என்று கேட்டு மீனாவிடம் வாக்குவாதம் செய்து இருக்கிறார்கள்.   இதில் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுடலைமுத்து முன்னதாகவே கொண்டு சென்றிருந்த அரிவாளை எடுத்து மீனாவின் கழுத்து , தலை என சரமாரியாக வெட்ட,   ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.   கொலை செய்துவிட்டு சுடலைமுத்துவும்  அவருடன் வந்தவர்களும் தப்பி ஓடி விட்டார்கள்.   போலீசார் வழக்கு பதிவு செய்து சுடலைமுத்து உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.  ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.