பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை

 
t

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி விட்டதால் திருச்சி துறையூர் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  

 திருச்சி மாவட்டத்தில் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்.   இவரின் மனைவி லில்லி(32).   உப்பிலிய புரத்தை அடுத்த உள்ள நெட்ட வேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் லில்லி ஆங்கிலப் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.  

இந்த நிலையில், பள்ளியில் ஆசிரியர் மோகன்தாஸ் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.  இதனால் மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் மோகந்தாஸ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.   இந்த வழக்கில் லில்லி இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.  

இதனால் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார்.   இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் சீதாலட்சுமி நகரில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு நேற்று முன் தினம் சென்றிருக்கிறார்.   தாய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

s

 சம்பவம் குறித்து அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆசிரியை லில்லியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் லில்லியின் உடலை வாங்க மறுத்த கணவர் குணசேகர் தனது உறவினர்களுடன் ஸ்ரீரங்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டு இருக்கிறார்.

 தகவல் அறிந்த போலீசார், முசிறி கல்வி மாவட்ட அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.   அப்போது தன் மனைவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் குணசேகரன். அதிகாரிகளும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றார்கள்.

 இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.   போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.   இதன் பின்னர் லில்லியின் உடலை பெற்றுக் கொண்டார்கள் அவர் உறவினர்கள்.   அதன் பின்னர் துறையூரில் இருக்கும் மின் மயானத்தில் லில்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது.