அரசியல் புள்ளிகளுக்கு பெண்களை அனுப்பி வந்த சாண்ட்ரோ ரவி சிக்கினான்

 
sa

முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பெண்களை அனுப்பி  விபச்சார தொழில் செய்து வந்த  மைசூரை சேர்ந்த புரோக்கர் சான்ட்ரோ ரவி குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.   இதனால் சான்ட்ரோ ரவியுடன் தொடர்பில் இருந்த முக்கிய புள்ளிகளும் அதிகாரிகளும் கலக்கம் அடைந்துள்ளார்கள். 

 கர்நாடக மாநிலத்தில் மைசூர் விஜய நகரை சேர்ந்த 40 வயது உள்ள நடுத்தர வயது பெண் தன் கணவர் மஞ்சுநாத் என்கிற சான்ட்ரோ ரவி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உயிரைக் கொல்லும் நோயை பரப்பி வரதட்சனை கொடுமையும் செய்வதாக கடந்த நாலாம் தேதி அன்று விஜயநகர காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.  

 இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதும் சாண்ட்ரோ ரவி தலைமறைவானார்.  பின்னர் போலீசாரின் விசாரணையில் தான் சான்ட்ரோ ரவியின் உண்மை முகம் தெரிய வந்திருக்கிறது.

o

அரசியல் முக்கிய புள்ளிகள்,  உயரதிகாரிகள், செல்வாக்கு மிக்க  தலைவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெண்களை வரைவழைத்து விபச்சாரத் தொழில் நடத்தி வந்திருக்கிறார் என்கிற அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கிறது.    ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரபல கார்களின் பெயரை சூட்டி வாடிக்கையாளர்களிடம் லட்சக் கணக்கில் பணம் கறந்திருக்கிறார்  என்பதும்,   பல பெண்களை வேலை வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளி வந்ததும் தெரிய வந்திருக்கிறது.

 கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மகன் உட்பட பல்வேறு முக்கிய அரசியல் புள்ளிகளுடன் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக நாடகமாடி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.   இந்த செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டுதான் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து பணம் பறித்திருக்கிறார்.

 சம்பாதித்த பணத்தில் விலை உயர்ந்த கார்களையும் வாங்கி குவித்திருக்கிறார்.   இதை அடுத்து இந்த வழக்கின் தீவிரம் அறிந்து போலீசார் அவரை பிடிக்க ராம் நகர், மாண்டியா, மைசூர், ராயச்சூர் மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் மூன்று சிறப்பு படைகள் அமைத்திருக்கிறார்கள்.   கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் சான்ட்ரோ ரவியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்துள்ளனர்.

 கடந்த 10 நாட்களுக்கு பின்னர் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் சாண்ட்ரோ ரவி பதுங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது.  ரவியும் அவரது கூட்டாளிகள் ராம்ஜி, சதீஷ், மதுசூதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 ரவியின் கூட்டாளி சேத்தன் கடந்த 12ஆம் தேதி அன்று மந்த்ராலயா கோவிலில் கைது செய்யப்பட்டுள்ளார்.   அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் குஜராத் போலீஸ் உதவியுடன் அகமதாபாத்தில் பதுங்கி இருந்த ரவியையும் அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.   அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக  செயற்கை முடியை எடுத்துவிட்டு,  மீசையை எடுத்து விட்டு உலவி வந்திருக்கிறார்.

 தினமும் ஒரு சிம் கார்டை மாற்றிக் கொண்டே வந்ததால் ரவியை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.   ரவி மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் 28 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன என்பதும்,   கிரிமினல் வழக்கில் கடந்த 2005 ஆம் ஆண்டில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து வந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது தற்போதைய விசாரணையில்.