கை, குதிகால் நரம்புகளை அறுத்து தலைமை ஆசிரியை படுகொலை

கை மற்றும் குதிகால் நரம்புகளை அறுத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் தலைமை ஆசிரியை. சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேட முற்பட்ட போது வீட்டில் சிசிடிவி கேமராவுக்காக பொருத்தப்பட்டிருந்த ஹார்ட் டிஸ்க்கையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கொலையில் வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் காண்பா நகரில் வசித்து வந்த ரஞ்சிதம், தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார் காலை 9 மணி ஆகியும் ரஞ்சிதம் பள்ளிக்கு வராததால் உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் போன் செய்திருக்கிறார்கள். போனும் எடுக்காததால் வீட்டிற்கு சென்று பார்த்து இருக்கிறார்கள்.
அப்போது வீட்டின் முன்பக்கம் பூட்டப்பட்டிருக்கிறது. இதனால் வீட்டின் பின்பக்கம் வழியாக சென்று பார்த்து உள்ளார்கள். அப்போது வலது கை நரம்பு, குதிகால் நரம்புகள் அறுத்து கொடூரமான முறையில் ரஞ்சிதம் கொலை செய்யப்பட்டு கிடந்திருக்கிறார். உடனே போலீசாருக்கு தகவல் சொல்ல போலீசார் விரைந்து வந்து ரஞ்சிதம் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சிசிடிவி கேமராவுக்காக பொருத்தப்பட்டிருந்த ஹார்ட் டிஸ்க்கையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றது கண்டு அதிர்ந்தனர். ரஞ்சிதம் அணிந்திருந்த 20 பவுன் நகைகள் காணவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் பணத்துக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வட மாநில கொள்ளையர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.