மனைவியை குத்தி அருவியில் தள்ளிய கணவர் - காட்டுக்குள் இருந்த சிசிடிவியால் சிக்கினார்

இளம் காதல் மனைவியை காட்டுக்குள் அழைத்துச் சென்று கத்தியால் குத்தி அருவியில் தள்ளி விட்டு வந்த கணவர் காட்டுக்குள் இருந்த சிசிடிவி கேமராக்கள் காட்சிகளின் மூலம் சிக்கி இருக்கிறார்.
சென்னை அடுத்த செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன். 19 வயதான இவர் புழல் அடத்த கதிர்வேடு உட்பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியை(19) காதலித்து திருமணம் செய்திருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி அன்று திடீரென்று தமிழ்ச்செல்வி மாயமாய் இருக்கிறார்.
தமிழ்ச்செல்வியின் பெற்றோர் மதனிடம் விசாரித்த போது சரியான பதில் சொல்லாமல் இருந்திருக்கிறார். இதனால் அவர் மீது சந்தேகம் கொண்ட தமிழ்ச்செல்வி பெற்றோர், கடந்த 30ஆம் தேதி அன்று செங்குன்றம் காவல் நிலையத்தில் தமிழ்செல்வியை காணவில்லை என்று புகார் அளித்து இருக்கிறார்கள்.
விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கோனே அருவிக்கு மதனும் தமிழ்ச்செல்வியும் குளிக்கச் சென்றது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து மதன்தான் தமிழ்ச்செல்வியை கொலை செய்திருப்பார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வந்தனர்.
சந்தேகத்தில் கோனி அருவிக்கு சென்ற போலீசார் அங்கே அருவிக்கு செல்லும் பாதையில் வனத்துறை நிர்வாகத்திற்கு சொந்தமான கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது, மதனும் தமிழ்ச்செல்வியும் வனப்பகுதிக்குள் செல்வது தெரிய வந்திருக்கிறது. ஆனால் திரும்பி வரும்போது மதன் மட்டும் தனியாக வந்தது பதிவாகி இருந்தது.
இதனால் மதன் தமிழ்ச்செல்வியை கொலை செய்துவிட்டு திரும்பியது உறுதியானது. இதையடுத்து மதனை பிடித்து போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்திய போது கத்தியால் குத்தி அருவியில் தள்ளிவிட்டதை ஒப்புக்கொண்டிருக்கிறார் மதன். அதன் பின்னர் போலீசார் மதன் காட்டிய இடத்தில் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.
காதல் மனைவியை கத்தியால் குத்தி அருவியில் தள்ளி விட்டு வந்த கணவன் செயல் பாடியநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.