வலுக்கட்டாயமாக வாயில் ஆசிட் ஊற்றிய கணவர்- கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

கர்ப்பிணி மனைவியின் வாயில் வலுக்கட்டாயமாக ஆசிட்டை ஊற்றி குடிக்க வைத்ததில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். வரதட்சணை விவகாரத்தினால் இந்த கொடுமை நிகழ்ந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.
தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் மாவட்டம். இம்மாவட்டத்தில் ராஜ் பேட் தண்டா பகுதியில் வசித்து வருபவர் தருண். இவரது மனைவி கல்யாணி. திருமணம் நடந்து நான்கு வருடங்கள் ஆகியும் தம்பதிக்கு குழந்தை இல்லை. தற்போது கர்ப்பமடைந்திருக்கிறார் கல்யாணி. ஆனால் கல்யாணி கர்ப்பமடைந்த நாளில் இருந்து அவரை அதிகமாக துன்புறுத்த ஆரம்பித்திருக்கிறார் தருண்.
நீ அழகாக இல்லை என்று சொல்லி துன்புறுத்தி வந்திருக்கிறார். வீட்டில் போய் வரதட்சணை வாங்கிக் கொண்டு வா என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் தொல்லை கொடுத்து தொந்தரவு செய்து துன்புறுத்தி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது டாய்லெட் சுத்தம் செய்வதற்கு வைத்திருந்த ஆசிட்டை எடுத்து வந்து வலுக்கட்டாயமாக கல்யாணி வாயில் ஊற்றி குடிக்க வைத்திருக்கிறார். மேலும் இதில் வயிற்று வலி ஏற்பட்டு சுருண்டு விழுந்து இருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கல்யாணி உயிரிழந்திருக்கிறார். தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று நாடகமாட நினைத்திருக்கிறார் தருண். ஆனால் உண்மை வெளியில் தெரிந்து விட்டதால் அவர் தலைமறைவாக உள்ளார்.
கல்யாணியை வரதட்சனை கேட்டு கணவனும் அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்தார்கள். இந்த நிலையில்தான் இப்படி நிகழ்ந்திருக்கிறது. தானாக ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொள்ளவில்லை கல்யாணி. வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றி கொலை செய்திருக்கிறார்கள் என்று உறுதியாக சொன்னதால், போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து தருண் மீதும் பெற்றோர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீசார். தலைமறைவாக இருக்கும் தருணை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.