கணவனால் கைவிடபட்ட பெண்ணை காதலிக்க போட்டி- வாலிபர் கொலை

 
Murder

பண்ருட்டி அருகே கணவனால் கைவிடபட்ட பெண்ணை காதலிக்க ஏற்பட்ட போட்டியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது தட்டாஞ்சாவடி களத்து மேடு பகுதி. இந்த பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.   கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை பிரிந்து  வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண் பண்ருட்டியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்த நிலையில் அங்கு ஆட்டோ ஓட்டும் சுமன் என்பவர் இவருக்கு பழக்கமாகியுள்ளார். சுமன் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி இருவரும் சேர்ந்து சுற்றி வந்த நிலையில் சுமனின் நண்பரான சக்திவேலும் அந்த பெண்ணுக்கு பழக்கமாகி உள்ளார். இந்த நிலையில் அந்த பெண் கடந்த சில தினங்களாக சக்திவேலுடன் சுற்றி வந்ததால் சுமனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனை பலமுறை சுமன் கண்டித்த நிலையிலும் இருவரும் அது குறித்து கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த சுமன் நேற்று இரவு சக்திவேலை களத்துமேடு பகுதிக்கு மது அருந்த வரச் சொல்லியதாக தெரிய வருகிறது. அப்போது நண்பர்களுடன் சுமன்  மற்றும் சக்திவேல் மது அருந்திய நிலையில் சுமன் அப்போது சக்திவேலிடம் அந்த பெண் என்னுடைய காதலி அதனால் அவரை விட்டுவிடு என கேட்டுள்ளார். ஆனால் சக்திவேல் நான் தான் காதலிக்கிறேன் என கூற இருவருக்கும் வாய் தகராறு ஏற்படுகிறது. அப்போது ஆத்திரத்தில் சுமன்,வசந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சக்திவேலை சரமாரியாக கத்தியால் வெட்டி அந்த இடத்திலேயே சக்திவேல் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காலையில் அப்பகுதி மக்கள் பார்த்தபோது சக்திவேல் களத்து மேடு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து புதுப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சக்திவேலை கொலை செய்த சுமன் உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி சக்திவேலின் உறவினர்கள் தட்டஞ்சாவடி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அதன் பிறகு போலீசார் சமாதானம் செய்து உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுப்பேட்டை போலீசார் சுமன் மற்றும் அவரது நண்பர் வசந்தகுமார் என இரண்டு பேரை கைது செய்துள்ளனர். போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர். கணவனை கைவிட்ட பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட போட்டியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.