காதலியை பார்க்க அரசு பேருந்தை திருடிச்சென்ற இளைஞர்

காதலியை பார்க்க, காதலியுடன் ஊர் சுற்ற பைக் மற்றும் சைக்கிளை இரவல் வாங்கி செல்லும் காதலர்கள் உண்டு. சிலர் பைக்கை திருடி செல்வதும் உண்டு. ஆனால் ஒரு காதலர் தனது காதலியை பார்ப்பதற்காக அரசு பேருந்தை திருடி கொண்டு இருக்கிறார். இலங்கையில் நடந்திருக்கிறது இப்படி ஒரு சம்பவம்.
இலங்கை பிலியந்தலை பஸ் டிப்போவில் நேற்று முன் தினம் இரவு பஸ் ஓட்டுனர்கள் பஸ்சை நிறுத்திவிட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை பார்ப்பதற்காக டிப்போவிற்குள் சென்று இருக்கிறார்கள். சிலர் உணவு வாங்க சென்று இருக்கிறார்கள்.
உணவு வாங்க சென்ற ஒரு ஓட்டுனர் திரும்பி வந்து பார்த்தபோது தனது பேருந்து காணாமல் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனே அவர் பிலியந்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் கெஸ்பேவ - பிலியந்தலையில் இருக்கும் சோதனை சாவடியில் அந்த பேருந்து செல்வது தெரிய வந்திருக்கிறது.
உடனே போலீசார் தகவல் கொடுக்கவும் சோதனை சாவடியில் இருந்தவர்கள் அந்த பேருந்தை மடக்கிய போது அதில் இருந்த இளைஞர் தப்பி ஓடி இருக்கிறார். அவரை விரட்டி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
விசாரணையில், காதலியை பார்ப்பதற்காக புறப்பட்டு வந்தேன். இரவு 8 மணிக்கு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது எந்த பேருந்தும் இயங்கவில்லை. இதனால் அதிருப்திய்ல் இருந்தேன். அந்த நேரம் பார்த்து டெப்போவில் இருந்த ஒரு பேருந்தில் சாவி அப்படியே இருப்பதே கண்டேன். உடனே எப்படியாவது காதலியை பார்த்து விட வேண்டும் என்பதற்காக பேருந்தை நானே இயக்கிக் கொண்டு சென்றேன். காதலியை பார்த்துவிட்டு திரும்பி வரும்போது போலீசிடம் சிக்கிக் கொண்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
அந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்திய வருகின்றனர்.
காதலியை பார்ப்பதற்காக அரசு பேருந்தை திருடி கொண்டு சென்ற இளைஞர்களின் செயல் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.