கொல்லிமலையில் குழந்தைகளை 250 பள்ளத்தில் வீசிய கொடூர தந்தைக்கு இரட்டை ஆயுள்

 
ch

மனைவி மீது உள்ள ஆத்திரத்தில் பெற்ற குழந்தைகளை 250 அடி பள்ளத்தில் வீசி கொன்ற கொடூர தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நாமக்கல் மகிளா நீதிமன்றம்.

நாமக்கல் மாவட்டத்தில்  கொல்லிமலையில் அரசம்பட்டி ஊரைச் சேர்ந்த தம்பதிகள் சிரஞ்சீவி -பாக்கியம்.  இத்தம்பதிக்கு கிரிதாஸ் என்ற எட்டு வயது மகனும் கவி தர்ஷினி என்ற ஐந்து வயது மகளும் இருந்துள்ளனர் .

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி அன்று சிரஞ்சீவிக்கும் பாக்கியத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது . இதில் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி மனைவி மீது உள்ள ஆத்திரத்தை குழந்தைகள் மீது காட்டி இருக்கிறார்.   மனைவியை பழிவாங்க வேண்டும் என்று தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு செம்மேடு சீக்குப்பாறை பகுதியில் அமைந்திருக்கும் வியூ பாயிண்ட் மீது ஏறி 250 அடி பள்ளத்தில் இரண்டு குழந்தைகளையும் தூக்கி வீசி இருக்கிறார்.

b

பின்னர் வீட்டிற்கு வந்த சிரஞ்சீவி குழந்தைகளின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அழுது இருக்கிறார்.  இதை பார்த்ததும் மனைவி பாக்கியத்திற்கு சந்தேகம் வந்திருக்கிறது.  அவர் உறவினர்களிடம் சொல்ல உறவினர்கள் எல்லாரும் சிரஞ்சீவி இடம் கேட்டும் எதுவும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.   குழந்தைகளை வேற வீட்டில் காணவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த மனைவி பாக்கியம் வாழவந்திநாடு போலீசில் புகார் அளித்துள்ளார்.

 போலீசார் நடத்திய விசாரணையில் தனது இரண்டு குழந்தைகளையும் சீக்குப்பாறை பகுதியில் 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசி கொன்று விட்டதாக சொல்லி இருக்கிறார்.   அவர் சொன்ன தகவல்களை வைத்துக்கொண்டு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் இரண்டு குழந்தைகளின் சடலத்தையும் மீட்டுள்ளனர் வாழவந்தி நாடு போலீசார்.

சிரஞ்சீவியை கைது செய்து நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர் . இது குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்ததை அடுத்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது.  அந்த தீர்ப்பில் சிரஞ்சீவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.   இதை அடுத்து சிரஞ்சீவியை கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.