9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்! அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த பயங்கரம்

 
rape

சென்னை ஊரப்பாக்கம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 72 வயது காமக்கொடூரன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 9 வயது சிறுமி, அங்குள்ள பொது இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் (72) என்ற முதியவர் அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி நடந்தவற்றைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், குழந்தை நல குழுமத்துடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கோவிந்தராஜனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

பிஞ்சு குழந்தையிடம் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட 72 வயது முதியவரின் செயல் ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது வயது முதிர்ந்தவர்களைக் கௌரவமாகப் பார்க்கும் சமூகத்தில் இத்தகைய காமக் கொடூரர்கள் ஊடுருவியிருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு போக்சோ  சட்டத்தின் கீழ் எவ்வித சமரசமுமின்றி மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட அனுப்பும்போதும் அறிமுகமானவர்களிடம் பழகும்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் இச்சம்பவத்தில் சிறுமி காட்டிய துணிச்சலும் பெற்றோர் எடுத்த உடனடி சட்ட நடவடிக்கையுமே அந்த முதியவரைச் சிறைக்கு அனுப்பியுள்ளது இது போன்ற இக்கட்டான சூழலில் தயங்காமல் புகார் அளிப்பதே மற்ற குழந்தைகளுக்கு நாம் செய்யும் பாதுகாப்பாகும்.