பள்ளி பேருந்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை​​​​​​​

 
ச்

செங்கல்பட்டு மாவட்டம் பாலூரில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை தனியார் ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பாலூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஒரு பள்ளி பேருந்து உள்ளது. அதில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்கள் பள்ளிக்கு வந்து பயின்று வருகின்றனர். 

பள்ளி பேருந்தின் கிளீனராக பாலூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த முருகன் (50) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல பள்ளி முடிந்து மாணவ மாணவிகளை பேருந்தில் ஏறி சென்றனர். அனைத்து மாணவர்களும் பேருந்தில் இருந்து இறங்கிய பின்னர் வடக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்த எல்கேஜி படிக்கும் ஐந்து வயது சிறுமியை இறக்கி விடுவதற்காக பேருந்து சென்று கொண்டிருந்தது. 

அப்போது பேருந்தின் உள்ளே இருந்த கிளீனர் முருகன் (50) என்பவன் ஐந்து வயது பள்ளி மாணவிக்கு ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை அளித்துள்ளான். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும் சிறுமிக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனையடுத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கிளீனர் முருகனை கைது செய்த பாலூர் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.