இன்டர்வியூக்கு சென்ற மாணவியை கடத்தி சென்று எரித்த 2 இளைஞர்கள்! திருச்சியில் பரபரப்பு
திருச்சி சனமங்கலம் அருகே எரிந்த நிலையில் கல்லூரி மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி- கலா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் தற்போது திருச்சி மாநகர் சீனிவாசா நகர் பகுதியில் மகளின் படிப்பிற்காக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர். இவர்களது மகள் மீரா ஜாஸ்மின் எம்எஸ்சி கணிதம் படிப்பை அதே பகுதியில் தனியார் கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் முடித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மீரா ஜாஸ்மின் பெற்றோர்களிடம் நேர்முகத் தேர்வுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு நேரமாகியும் வீடு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மீரா ஜாஸ்மின் செல்போன் டவர் எந்தப் பகுதியில் இருக்கிறது என இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது சனமங்கலம் காப்பு காட்டு பகுதியில் காட்டியதால் அங்கு சென்ற போலீசார், அந்தப் பகுதியில் மீரா ஜாஸ்மின் உடல் முழுவதும் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் யார் கொலை செய்தார்கள் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அரசு தலைமை மருத்துவமனையில் மீரா ஜாஸ்மின் உடலைப் பார்த்து அவரது தாய் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்தப் பெண் கொலை செய்து அதன் பின்னர் எரித்து உள்ளனர் என்பதும், அதேபோன்று இறந்து கிடந்த பெண்ணின் அருகில் இரண்டு பீர் பாட்டில்கள் இருந்துள்ளது. ஆகவே இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் யார் அந்த இளைஞர்கள் என்பது குறித்து சிறுகனூர் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள செல்போன் டவரை வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


