4 மாத இன்ஸ்டாகிராம் காதலால் பறிபோன 16 வயது சிறுமியின் உயிர்- கடிதத்துடன் கதறும் பெற்றோர்
நான்கு மாத இன்ஸ்டாகிராம் காதலால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அந்தியூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த (முருகேசன் என்பவரின் மகள் தாரணி ) 16 வயது +1 மாணவி கடந்த மாதம் 22.ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு மாணவி அவரது பெற்றோரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரை காதலித்ததாகவும், அவரின் நடத்தை சரியில்லாததால் இனிமேல் காதலிக்க வேண்டாம் எனக் கூறி பேசாமல் இருந்ததன் காரணமாக தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து மாணவியின் செல்போன் எண்ணை அவரது தந்தை வாங்கி வைத்துள்ளார். அப்போது அந்த இளைஞர் அவரது தந்தையிடமும் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவி தன்னால்தான் இவ்வளவு பிரச்சனை என கூறியுள்ளார். தொடர்ந்து அவரது தந்தை ஆறுதல் தெரிவித்து, தனது மகளை அருகில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அங்கே சென்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் எழுதி வைத்த கடிதத்தில், நான் காதலிக்க மாட்டேன் என கூறியும் காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்வதாக இளைஞர் கூறியதை அடுத்து காதலிக்க ஒப்புக்கொண்டதாகவும், தொடர்ந்து உங்களிடம் பள்ளி விஷயமாக செல்கிறேன் எனக் கூறிவிட்டு அவனுடனை பார்க்கச் சென்றதாகவும் அங்கே என்னை அடித்து போட்டோ எடுத்ததாகவும், இடையில் ஒரு வாரம் அவனிடம் பேச முடியாமல் போனதாகவும் அதன் காரணமாக நான் காதலிக்கவே இல்லை எனக் கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், மேலும் தனது போட்டோவை வைத்து ஏதாவது செய்து விடுவதாக பயமுறுத்துவதாகவும், எனவே இது குறித்து தங்களிடம் தெரிவித்ததாகவும் அம்மா அப்பா மன்னிச்சிடுங்க பாப்பாவ பாத்துக்கோங்க என எழுதியிருந்தார்.
இதை அடுத்து மாணவியின் பெற்றோர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர் மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் மீது 26 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை அடுத்து நேற்று அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் மாணவியை செல்போனில் மிரட்டிய விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கீழ் தனியாளம்பட்டு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் சதீஷ் என்பவரை கைது செய்தனர். அலைபேசியை அணைத்துவிட்டு, தலைமறைவாக இருந்துவந்த நிலையில் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ் தனியாளம்பட்டு கிராமத்தில் சதீஷை பிடித்த போலீசார் விசாரணைக்காக அந்தியூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் சதீஷ் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும், தனது தந்தை இறந்த நிலையில் தாய் மற்றும் அண்ணனுடன் வசித்து வருவதாகவும், இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியை தொடர்பு கொண்டு காதலித்ததாகவும், பின்பு தாரணியை பார்க்க வேண்டும் எனக் கூறி பவானிக்கு வர வைத்ததாகவும், அங்கே இருவரும் போட்டோ எடுத்ததாகவும், பின்பு வீட்டுக்கு சென்றவள் தான் படிக்க வேண்டும், அதனால் இனிமேல் காதலிக்க வேண்டாம் எனக் கூறியதாகவும், அதை அடுத்து ஒரு வாரம் பேசாமல், இருந்ததோடு அவர் தந்தையிடம் போனை கொடுத்து விட்டதாகவும், அதன் காரணமாக கோவத்தில் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். இதை அடுத்து சதீஷ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இளைஞர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவரை தூக்கிலிட வேண்டும் என தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர், மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போதும் காவல் நிலையத்திற்கு வந்த மாணவியின் உறவினர்கள் இளைஞரை திட்டி தீர்த்தனர்.

