கோவையின் அடையாளங்களுல் ஒருவர் கோவை ஞானி மரணம்

 

கோவையின் அடையாளங்களுல் ஒருவர் கோவை ஞானி மரணம்

கோவை ஞானி – இது வெறும் பெயர் மட்டுமல்ல. எண்ணற்ற எழுத்தாளர்களுக்கு உத்வேகம் அளித்த ஆன்மா. கோவையின் அடையாளங்களில் பெருமை மிகுந்த அடையாளமாகக் கருதப்பட்டவர்.

தமிழ் இலக்கியத்தில் மாபெரும் உரையாடல்களை நிகழ்த்தியவர். 25 க்கும் மேற்பட்ட திறான்ய்வு நூல்களை எழுதியவர். ஒரு கட்டத்தில் பார்வை இழந்தும் உதவியாளர் மூலம் வாசிப்பையும் எழுத்துவதையும் நிறுத்தாதவர். பன்முகப்படைப்பாளி கோவை ஞானி இன்று மரணம் அடைந்தார்.

கோவையின் அடையாளங்களுல் ஒருவர் கோவை ஞானி மரணம்

கோவை ஞானியின் இயற்பெயர் பழனிச்சாமி. கோயம்புத்தூரில் உள்ள சோமனூரில் பிறந்தவர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆனால், அவரின் அடையாளம் என்பது தமிழ் இலக்கிய உலகில் பேசாத விஷயங்களைப் பொருட்படுத்தி திறனாய்வு செய்தவர் என்பதே.

மார்க்சியம் கற்ற ஞானி அது குறித்து பல்வேறு உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறார். பல நூல்களையும் எழுதியிருக்கிறார். இவரின் மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் எனும் நூல் தமிழ் இலக்கியச் சூழலில் விவாதத்தைக் கிளப்பியது.

தம் சிந்தனைய எங்கும் தேங்கி விடச் செய்யாது, புதிய தத்துவங்களைத் தேடினார். அயல்மொழியில் இருந்தால் தமிழுக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுத்தார். தமிழ் நேயம் எனும் சிற்றிதழை நடத்தியிருக்கிறார். தமிழ் கவிதை வரலாற்றில் தவறாமல் குறிப்பிடப்படுவது வானம்பாடி இயக்கம். அது உருவானதில் கோவை ஞானியின் பங்கு அளப்பரியது.  மார்க்சியம் பெரியாரியம் எனும் நூலுக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்றவர்.

எழுத்தாளர் ஜெயமோகன் தொடங்கி எண்ணற்றோர் இவரை ஆசான் என்று மரியாதையும் கொண்டாடுவர்.

கோவையின் அடையாளங்களுல் ஒருவர் கோவை ஞானி மரணம்

அவரின் இழப்பு குறித்து கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் அஞ்சலி குறிப்பு:

மற்றொரு ஆலமரமும் சாய்ந்தது. கோவை ஞானி மறைந்தார் என்ற துயரமான செய்தி. மார்க்சியம்- தமிழியம்- இந்திய தத்துவ மரபு ஆகிவற்றிற்கிடையே ஒரு புதிய உரையாடலுக்கு வித்திட்டவர் ஞானி. பல வருடங்களுக்கு முன்பே பார்வையிழந்த நிலையில் பிறர் உதவியுடன் இடையறாது எழுதியும் பேசியும் ஒரு பேரியக்கமாக செயல்பட்டார்.

என் இலக்கிய வாழ்வில் ஞானியின் பங்கு முக்கியமானது. தீவிர இடது சாரி களங்களில் செயல்பட்டுவந்த என்னை நவீன இலக்கியச் சூழலுக்குள் கொண்டு வந்தவர் ஞானி. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவர் நடத்தி வந்த ‘ நிகழ் ‘ இதழில் எனது கவிதைகளை பெரிதும் முக்கியத்துத்துடன் தொடர்ந்து வெளியிட்டார். ‘ கால்களின் ஆல்பம்’ நிகழில்தான் வெளிவந்தது. சுஜாதா அதன் வழியேதான் என் கவிதைகளுக்கு பரிச்சயமானார். மேலும் என் கிராமத்தில் நான் வெளி உலக தொடர்புகள் அற்றிருந்த காலத்தில் கோவையில் படித்துக்கொண்டிருந்த எங்கள் ஊரைச் சேர்ந்த நண்பரும் கவிஞருமான எம்.ஜோசப் மூலம் அவர் ஏராளமான சிற்றிதழ்களையும் மார்க்சிய நூல்களையும் எனக்கு கொடுத்தனுப்புவார். என்னைபோல ஏராளமான இளைஞர்களுக்கு அவர் ஊக்கம் அளித்திருக்க்கிறார்.

ஒரு ஆசிரியரை இழக்கிறேன். பார்வையிழந்த விழிகளால் அந்தகாரத்தில் எங்கோ பார்த்தபடி ” எப்படியிருக்கீங்க மனுஷ்ய புத்திரன்” என்று கரங்களை வருடி மிருதுவான குரலில் கேட்கும் ஞானியின் இருப்பு நெஞ்சைவிட்டு என்றும் அகலாது.

இந்த வாழ்வும் தமிழும் ஞானமும் யார் யாரோ எனக்கிட்ட பிச்சை. ஞானியும் எனக்கு பிச்சையிட்டிருக்கிறார்.

போய் வாருங்கள்’

கோவை ஞானியின் மரணம், தமிழ் இலக்கிய உலகில் பலரையும் இணைக்கும் புள்ளி மறைந்ததாக எழுத்தாளர்கள் வருத்தத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.