சென்னையில் விடுபட்ட 236 கொரோனா மரணங்கள்… தமிழக அரசு மறைத்ததா?

 

சென்னையில் விடுபட்ட 236 கொரோனா மரணங்கள்… தமிழக அரசு மறைத்ததா?

சென்னையில் இதுவரை 226 பேர் கொரோனாவுக்கு பலியானதாக கூறப்படுகிறது. உண்மையில் இந்த எண்ணிக்கை 460க்கும் மேல் இருக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் நிகழும் பிறப்பு, இறப்புகளை மாநகராட்சி பதிவு செய்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு வந்த தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் இறப்பு பதிவேட்டை ஆய்வு செய்தனர். அப்போது உடல் நலக் குறைவால் இறந்தவர்கள் என்று கூடுதலாக 236 பேரின் பெயர் இருப்பதைக் கண்டறிந்தனர்.

சென்னையில் விடுபட்ட 236 கொரோனா மரணங்கள்… தமிழக அரசு மறைத்ததா?

இவர்கள் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கையை தற்போதைய இறப்பு எண்ணிக்கையோடு சேர்த்தால் 460க்கும் மேல் செல்கிறது. அப்படி என்றால் தமிழகத்தின் இறப்பு விகிதம் தமிழக அரசு அறிவித்தது போல் 0.7 சதவிகிதமாக இருக்காது என்றும் 1.5 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

சென்னையில் விடுபட்ட 236 கொரோனா மரணங்கள்… தமிழக அரசு மறைத்ததா?
பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் மட்டும் இதுவரை 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்கள் மரணம் தொடர்பான அறிவிப்பு தமிழக அரசின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. இதே போல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் விவரமும் தமிழக அரசின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷிடம் கேட்டபோது, “தனியார் மருத்துவமனைகள் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு உண்மையில் அவர்கள் கொரோனாவால் உயிரிழந்திருந்தால் அந்த எண்ணிக்கை அரசின் கொரோனா மரணம் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பிரச்னை ஒரு வாரத்தில் சரி செய்யப்படும்” என்றார்.
இது குறித்து ஊடகம் ஒன்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர், “மரணங்களை மறைக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. எங்கள் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதன் மூலம் எங்களின் ஒளிவு மறைவற்றத் தன்மையை புரிந்துகொள்ள முடியும்” என்றார்.
தமிழக எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் கொரோனா மரணம் மறைக்கப்படுவதாக குற்றம்சாட்டி வந்தன. அப்படி எதுவும் மறைக்கப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு கொரோனா மரணங்களை மறைத்திருப்பது தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனைகள் கொரோனா மரணங்களை மறைக்க வேண்டியது இல்லை. அவர்கள் கொடுத்த அறிக்கையை கணக்கில் சேர்க்காமல் தமிழக அரசு விட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இதுபோல் வேறு என்ன என்ன விஷயங்களில் எல்லாம் அரசு மறைத்து வைத்துள்ளது என்று தெரியவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.