கொரோனா அதிகரித்ததற்கு காரணம் பொதுமக்களின் அலட்சியமா? அரசியல்வாதிகளா?

 

கொரோனா அதிகரித்ததற்கு காரணம் பொதுமக்களின் அலட்சியமா? அரசியல்வாதிகளா?

தேர்தல் அறிவிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு, முன்பாகவே கிராமசபை கூட்டம், ஊர் கூட்டம், கட்சிக் கூட்டம், பூத் கமிட்டி என கும்பல் சேர்த்து பிரசாரத்தை தொடங்கி விட்டனர். கூட்டம் கூட்டமாக ஆள்களை கூட்டி வந்து, கட்சிக் கொடியையும், சின்னம் போட்ட தொப்பியையும் கொடுத்து அமர வைத்தவர்கள் அவர்களுக்கு, ஐந்து ரூபாய்க்கு ஒரு மாஸ்க் வாங்கி கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், ஜனவரி துவக்கத்தில் நன்றாக குறைந்து வந்த தொற்று எண்ணிக்கை, பிப்ரவரி, மார்ச் மாதங்களில், மீண்டும் அதிகரித்துள்ளது.

இப்போது தொகுதிகளில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்களின் பிரசார வேனுக்கு பின்னால், நுாற்றுக்கணக்கான தொண்டர்கள் அணி வகுத்து செல்வதும், தெருமுனைகளில் கூட்டமாக நின்று பேசும் காட்சிகளை பார்க்க முடிகிறது. முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் நிலையில், ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கேட்கின்றனர்.

கொரோனா அதிகரித்ததற்கு காரணம் பொதுமக்களின் அலட்சியமா? அரசியல்வாதிகளா?

இந்நிலையில், கொரோனா பரவலை தடுப்பது கேள்விக்குறியாகிவிட்டது. இதனால் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இந்த முறை நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல், வழக்கம்போல் நடக்கும் தேர்தல் அல்ல, பெருந்தொற்று காலத்தில் நடக்கும் தேர்தலாகும். சவால்கள் நிறைய உள்ளன. அதனால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் கட்சிகள், தொகுதிகளுக்குள் ஊர்வலமாக சென்று, ஆர்ப்பாட்டமாக பிரசாரம் செய்யாமல், விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரசார வியூகங்களை அமைத்துக்கொண்டால் பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

இந்தத் தேர்தலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும்; யாருக்கு போடக் கூடாது என, பெரும்பாலான மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துதான் வைத்திருக்கின்றனர். அந்த முடிவை, இனி கூட்டம் கூட்டி நடக்கும் பிரசாரமோ, பொதுக்கூட்ட மேடை முழக்கமோ மாற்றிவிடப் போவதில்லை. அதனால், அரசியல் கட்சியினர், விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.