பாலியல் குற்றவாளிக்கு தேர்தலில் போட்டியிட சீட்.. எதிர்ப்பு தெரிவித்த பெண் தொண்டரை தாக்கிய உ.பி. காங்கிரசார்

 

பாலியல் குற்றவாளிக்கு தேர்தலில் போட்டியிட சீட்.. எதிர்ப்பு தெரிவித்த பெண் தொண்டரை தாக்கிய உ.பி. காங்கிரசார்

உத்தர பிரதேசத்தில் பாலியல் குற்றவாளிக்கு இடைத்தேர்தலில் போட்டியிட சீட் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் தொண்டரை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. தியோரியாவில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தியோரியா தொகுதி இடைத் தேர்தலில் முகுந்த் பாஸ்கர் என்பவரை நிறுத்தும் காங்கிரஸ் கட்சியின் முடிவை அந்த கட்சியின் பெண் தலைவர்களில் ஒருவரான தாரா யாதவ் எதிர்த்தார். இதனையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது கட்சியை சேர்ந்தவர் என்றும் பாராமல் தாரா யாதவை தாக்கியுள்ளனர்.

பாலியல் குற்றவாளிக்கு தேர்தலில் போட்டியிட சீட்.. எதிர்ப்பு தெரிவித்த பெண் தொண்டரை தாக்கிய உ.பி. காங்கிரசார்
தாரா யாதவ்

தாரா யாதவ் இது தொடர்பாக கூறியதாவது: காங்கிரஸ் தலைவர்கள் ஒருபுறம், ஹத்ராஸ் சம்பவத்துக்கு நீதி கேட்டு போராடுகிறார்கள், அதேவேளையில் உத்தர பிரதேச இடைத்தேர்தலில் போட்டியிட பாலியல் குற்றவாளிக்கு சீட் கொடுக்கின்றனர். இது தவறான முடிவு. இது கட்சியின் பிம்பத்தை கெடுக்கும். இடைத்தேர்தலில் போட்டியிட பாலியல் குற்றவாளி முகுந்த் பாஸ்கருக்கு சீட் வழங்கும் கட்சியின் முடிவை கேள்வி கேட்டபோது கட்சி தொண்டர்களால் நான் தாக்கப்பட்டேன். பிரியங்கா காந்தி நடவடிக்கை எடுப்பதற்காக நான் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாலியல் குற்றவாளிக்கு தேர்தலில் போட்டியிட சீட்.. எதிர்ப்பு தெரிவித்த பெண் தொண்டரை தாக்கிய உ.பி. காங்கிரசார்
தாரா யாதவை தாக்கும் காங்கிரசார்

காங்கிரஸ் பெண் தலைவரை அந்த கட்சி தொண்டர்களே தாக்கிய சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக தேசிய மகளின் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா கூறுகையில், ஒரு பெண் கட்சி தொண்டரை சுமார் 25 பேர் தாக்கிய சம்பவத்தை கேள்விபட்டோம். பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நாங்கள் சொல்லி வரும் வேளையில், இந்த சம்பவம் தீவிரமான விஷயம். அரசியல்வாதிகள் ஒரு பெண்ணிடம் குண்டர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய நேரமிது என தெரிவித்தார்.தாரா யாதவ் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய உத்தர பிரதேச காங்கிரஸ் 3 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை நியமனம் செய்துள்ளது.