பள்ளிகள் திறப்பதற்கு முன் தீர்க்க வேண்டிய குழப்பங்கள்!

 

பள்ளிகள் திறப்பதற்கு முன் தீர்க்க வேண்டிய குழப்பங்கள்!

கடந்த 8 மாதங்களுக்கு மேல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பதற்கு மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டினாலும், பள்ளிகளை திறந்துவிட அரசு முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தில் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், அதற்கு பெற்றோர் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. அதன்பின்னர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதுடன், திரும்பவும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பதற்கு முன் தீர்க்க வேண்டிய குழப்பங்கள்!

இந்த நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பது பாதுகாப்பானது அல்ல என்கிற அச்சத்தைத் தாண்டி, மேலும் பல விஷயங்களை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பள்ளிகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள், ஒவ்வொரு குழந்தைக்கும் தனி இருக்கை, வெப்ப பரிசோதனை என உரிய கட்டமைப்புகளை இதுவரை எந்த பள்ளியும் செய்ததாக தெரியவில்லை. ஆனால் பள்ளிகளை திறந்துவிட வேண்டும் என்று மட்டும் ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி திறப்பதன் மூலம், இந்த ஆண்டு கல்வி கட்டணம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் என்கிற பெயரில் ஒரு தொகையை பெற்றோரிடமிருந்து வசூலித்துவிடலாம் என்பது தனியார் பள்ளிகளின் திட்டமாக உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். அதன் இன்னொரு வடிவம்தான், ஆன்லைன் வகுப்பு என்கிற பெயரில் பள்ளிகள் கல்வி கட்டணத்தை கறந்து வருகின்றன. எந்த பள்ளியிலும் ஆன்லைன் வகுப்பு என்கிற கட்டமைப்பு கிடையாது. ஆன்லைன் வகுப்புகளில் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்ற ஆசிரியர்கள் இல்லாத நிலையில், வகுப்பில் பாடம் எடுப்பது போலவே ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றனர். கடமைக்காக பாடம் நடத்தி பணம் வசூலிக்கின்றனர் என பெற்றோர் கூறுகின்றனர்.

பள்ளிகள் திறப்பதற்கு முன் தீர்க்க வேண்டிய குழப்பங்கள்!

பள்ளிகள் திறக்க முடியாத சூழல், ஆன்லைன் வகுப்புகளும் கடமைக்கு என இருக்கும்போது, நடப்பாண்டில் மாணவர்களின் கல்விச் சூழல் மீது புதிய குழப்பங்களையும் கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்.
தற்போதுவரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், கற்பித்தல் பாடத்திட்டம், தேர்வு முறைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. பாடத் திட்டங்கள் முழுமையாக நடத்தப்படாத நிலையில், ஆண்டு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்வதில் சிக்கல் உள்ளது. பாடத்திட்டத்தை முழுமையாக நடத்தலாம் என்றால், இந்த ஆண்டுக்கான பாடத்திட்டங்களை கற்பிக்க மிகக் குறைந்த கால அளவே உள்ளது. இப்படியான குழப்பமான நிலையில், பாடங்களை முழுமையாக முடிக்க வேண்டும் என வேகவேகமாக நடத்தினால் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் சுமை மற்றும் அவர்களது கற்றல்முறையையும் பாதிக்கும் என குறிப்பிடுகின்றனர்.

பள்ளிகள் திறப்பதற்கு முன் தீர்க்க வேண்டிய குழப்பங்கள்!

வகுப்புகளை முழுமையாக நடத்தலாம் என்றாலும், பள்ளி நாட்களை நீடிக்க வேண்டும். அதனால் அடுத்த ஆண்டு பள்ளி மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும். இப்படியாக குழப்பங்கள் மாணவர்களின் பிற்கால கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் குழப்பங்களை ஏற்படுத்தும். எனவே பள்ளிகள் திறப்பு விஷயத்தில் அவசரம் காட்டுவதைவிட, இந்த சிக்கல்களுக்கு முதலில் முடிவு எட்ட வேண்டும். அதன்பின்னர் மாணவர்களை பள்ளிக்கு வர வைப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்பதே பெற்றோர்கள், கல்வியாளர்களின் எண்ணமாக உள்ளது.