கோவையில் இருசக்கர வாகனத்திற்கு பாடை கட்டி காங்கிரஸார் நூதன போராட்டம்!

 

கோவையில் இருசக்கர வாகனத்திற்கு பாடை கட்டி காங்கிரஸார் நூதன போராட்டம்!

கோவை

கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் இருசக்கர வாகனத்தை பாடையில் கட்டி தூக்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பு இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பட்டம் நடைபெறும் என கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவினாசி சாலை அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் இருசக்கர வாகனத்திற்கு பாடை கட்டி காங்கிரஸார் நூதன போராட்டம்!

காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தொண்டர்கள் இருசக்கர வாகனத்தை பாடையில் கட்டி இழுத்து வந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, இந்த ஆண்டில் மட்டும் 43 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், தொடர்ந்து ஏறி வரும் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதேபோல், கோவை டிஎஸ்பி அலுவலகம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் முன்பாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹர சுதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்றனர்.