‘நான் நவீன சங்கியா?’ முற்றிலும் பொய்- விஜய் ஆண்டனி பரபரப்பு அறிக்கை

 
விஜய் ஆண்டனி

தமிழ் இசைத்துறையில் இருப்பவர்கள் சமீபகாலமாக படங்கள், ஆல்பம் பாடல்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, பொது இடங்களில் இசை கச்சேரிகளை நடத்திவருகின்றனர். அந்த வகையில் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், விஜய் ஆண்டனி ஆகியோர்  இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மார்ஸ் தமிழ்நாடு என்ற யூடியூப் சேனல் தொகுப்பாளர், விஜய் ஆண்டனி மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அந்த வீடியோவில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை நவீன சங்கி என விமர்சிக்கிறார். பாஜகவின் ’என் மண் என் மக்கள்’ பாத யாத்திரைக்கு டைட்டில் பாடல் ஒன்றை தயார் செய்து கொடுத்ததாகவும், அது அண்ணாமலைக்கு பிடிக்காததால் தீனாவிடம் அந்த புராஜக்ட்டை கைமார்த்தி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

 

பாஜகவும், தீனாவும் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டனர். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான், எக்காரணம் கொண்டும் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடமாட்டார் என்பதால் அண்ணாமலை டீம் ஏமாற்றத்துடன் திரும்பியது. இதனால் தீனா- கங்கை அமரன் கூட்டணியில் அந்த பாட்டை ஒருவழியாக எடுத்து முடித்துள்ளனர் என அந்த யூடியூப் ஆங்கர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அதுமட்டுமின்றி, “ஏ.ஆர்.ரஹ்மான் இப்போதுதான் லாக் ஆகி இருக்கிறார். விட்ராதீங்கனு” என பத்திரிக்கையாளர் ஒருவருக்கு விஜய் ஆண்டனி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருப்பதாகவும் அந்த வீடியோவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.



இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, “ என்‌ மீது அன்பு கொண்ட, என்‌ அன்பு மக்களுக்கு வணக்கம்‌. நான்‌ இப்போது சிறு மன வேதனையுடன்‌, இந்த கடிதம்‌ மூலம்‌ சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்‌. ஒரு சகோதரி, யூடியூப் சேனல் ஒன்றில்‌, என்னையும்‌ சகோதரர்‌ ரகுமான்‌ அவர்களையும்‌ தொடர்பு படுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார்‌. அது முற்றிலும்‌ பொய்யே ! அந்த youtube channel மீது நான்‌ மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன்‌. மான நஷ்ட வழக்கில்‌ வரும்‌ தொகை அனைத்தையும்‌, நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்‌. என்றும்‌ அன்புடன்‌, உங்கள்‌. விஜய்‌ ஆண்டனி” எனக் குறிப்பிட்டு, அந்த அறிக்கையை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.