“சகுனிகள் நிறைய இருக்கும் சமுதாயத்துல யோக்கியவானா இருக்குறது ரொம்ப கஷ்டம்” - ரஜினிகாந்த்

 
rajini

சகுனிகள் நிறைய இருக்கிற இந்த சமூகத்துல யோகியவானா இருக்கறது ரொம்ப கஷ்டம் என்றும், சாணக்கிய தன்மையும் வேண்டும் சாமர்த்தியமும் வேண்டும்! என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம், அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.20) மாலை நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவின் இறுதியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஒரு படம் வெற்றி கொடுத்தால் அடுத்த படம் வெற்றி கொடுப்பது ரொம்ப கஷ்டம். அதே ஒரு படம் தோல்வி அடைந்தால் அடுத்த படம் வெற்றி கொடுப்பதும் ரொம்ப கஷ்டம். ஒரே சரிசமமாக‌ படத்தினை செய்து மக்களை அணுக வேண்டியுள்ளது அல்லது அதற்கு மேல் அந்த படத்தை வெற்றி அடைய வேண்டியுள்ளது. ஒரு சில படங்கள் ஒரு சில நேரத்தில் மேஜிக் செய்யும் அப்படி ஒரு படம் தான் ஜெயிலர். 

நல்ல இயக்குனர்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. நல்ல கதைகளை எடுக்கும் வெற்றிமாறன் போல இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் மாஸ் ஹீரோக்களுக்கு ஏற்ப இயக்குனர்கள் அதிகமாக இல்லை. ஒரு மாஸ் ஹீரோ வெற்றி அடைய வேண்டும் என்றால் தயாரிப்பு நிறுவனமும்,  இயக்குனரும் மிகவும் முக்கியம். ஜெய்பீம் படம் பார்த்தேன் மிக அருமையாக இருந்தது. ஒரு ஊடகவியலாளர் படம் எடுத்திருக்கிறார் என்பதால் மீண்டும் ஒருமுறை இந்த படத்தை பார்த்தேன் பிறகு வியந்தேன். 

Vettaiyan

ஞானவேல் என்னிடம் வந்ததும், ‘நீங்கள் நல்ல கருத்துடைய படங்களை எடுக்கிறீர்கள்;  ஆனால் எனக்கு கோடி கோடியாய் பணம் போட்டு படம் எடுக்கிறார்கள் அந்த கோடி ரூபாயை திரும்பி எடுக்க வேண்டும். மக்கள் வருகிறார்கள் அவர்கள் கொண்டாட வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.  உங்கள் கருத்தோடு கமர்சியலாக படத்தை உருவாக்க முடியுமா என கேட்டேன். ‘ ஒரு பத்து நாட்கள் கொடுங்கள் என கேட்டு சென்றார். உடனே அடுத்த இரண்டு நாட்களில் எனக்கு தொடர்பு கொண்டு பேசினார்.  அப்போது லோகேஷ், நெல்சன் மாதிரி என்னால் படம் எடுக்க முடியாது என்றும்,  ரசிகர்கள் உங்களை பார்க்கிற வேறொரு கண்ணோட்டத்தை காட்ட வேண்டும் என ஆசைப்படுவதாக கூறினார். அவர்கள் மாதிரி மட்டும் படம் வேண்டும் என்றால் நான் அவர்களிடமே போயிருப்பேன். நீங்கள் உங்கள் பாணியில் கதையை எழுதி வாருங்கள் என்றேன். 

லைக்கா தயாரிப்பு நிறுவனம் என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் போல் நான் நடித்தாலே சம்மதம் சொல்லிவிடுவார்கள்.  ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞராக கூறி வந்தார்.  பிறகு 100% அனிருத் எனக்கு வேண்டும் என இயக்குனர் ஞானவேல் கூறினார். நான் கூறினேன் உங்களுக்கு 100 சதவீதம் என்றால் எனக்கு ஆயிரம் சதவீதம் அனிருத் தான் வேண்டும் என்றேன். 

Fahadh

பல இயக்குனர்கள் இந்தியில் என்னையும் அமிதாப்பச்சனையும் இணைத்து படம் எடுக்க கேட்டுக் கொண்டார்கள்.  ஆனால் அவரும் ஒத்துக்கொள்ளவில்லை நானும் ஒப்புக்கொள்ளவில்லை . அமிதாபச்சனை ஒப்புக்கொள்ள தயாரிப்பாளர் அனுமதியோடு நீங்கள் போய் அவரை முயற்சி செய்யுங்கள் என கூறி ஞானவேலை அனுப்பி விட்டேன். அடுத்த இரண்டு நாளிலே அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்ற செய்தி அறிந்தேன். அமிதாப் பச்சன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. 

பகத் பாசிலுக்கு கதையை சொல்லிய பிறகு பணம் கொடுக்கவில்லை என்றாலும் இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று ஓகே சொல்லிக்கொண்டதாக இயக்குனர் கூறினார். அனைவரையும் ஓகே சொல்லிய பிறகு கதை எழுத இன்னும் இரண்டு மாதம் வேண்டும் என ஞானவேல் கேட்டுக் கொண்டார்.  உடனே அடுத்ததாக சன் டிவியில் படம் நடிக்க ஒப்பு கொண்டுள்ளோம் அவர்களிடம் கேட்க வேண்டும் என்று நான் அனுப்பி விட்டேன்.  அதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் லோகேஷ் கனகராஜ் இடம் கேட்க சொல்லிவிட்டனர். லோகேஷ் கனகராஜ் கேட்ட உடனே இரண்டு மாதம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அப்படி என்றால் அவர் ஒழுங்காக கதை பண்ணவில்லை என்று அர்த்தம் என காமெடியாக கூறினார்.

பகத் பாசிலை போன்று ஒரு எதார்த்த நடிகரை பார்த்ததே இல்லை.  ‘ஹாட்ஸ் ஆப் டு யூ’ பகத் பாசில் ஒரு அசாத்திய நடிகர். இந்தியில் நான் முதல் படம் பண்ண அமிதாப்பச்சன் தான் காரணம் கமலின் இந்தி படம் ஒன்று வெற்றியடைந்துள்ள போது ஒரு புதிய படத்திற்கு என்னை அமிதாப்பச்சன் பரிந்துரை செய்தார். எனக்கு ரோல் மாடலே அமிதாப் பச்சன் தான். இந்த படத்தில் அவர் நடிக்கிறார் என்ற உடனே அவ்வளவு மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்பட்டது. 

ரஜினி

அனிருத் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி செல்கிறார்.  அவர் வருகிறார் என்றவுடனே அனைத்து டிக்கெடுக்களும் விற்று தீர்ந்து விடுகிறது. குறிப்பாக அமெரிக்காவிற்கு சென்றபோது பத்தாயிரம் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து விட்டன ஆனால் இசை கச்சேரி நடத்தும் நாளான அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது ஆனால் ஒரு மாத்திரையை சாப்பிட்டு அந்த கச்சேரியை 2:30 மணி நேரம் நடத்தி முடித்தார். உழைக்கும் நேரத்தில் உழைக்க வேண்டும். ஒரு படத்தை பார்த்து விட்டு இந்த படம் ஓடும் ஓடாது என ஓப்பனாக சொல்லிவிடுவார். 

அனிருத் எனக்கு பிள்ளை மாதிரி. படம் உண்மையாக வெற்றி அடைய வேண்டும்.  குறிப்பாக இயக்குனர் ஞானவேலுக்காக வெற்றியடைய வேண்டும். ஞானவேல் போன்ற ஒரு இயக்குனர் இந்த திரைத்துறைக்கு தேவை. ஒரு கருத்துள்ள கதைகளை சொல்ல வேண்டுமென அவர் நினைக்கிறார்.  சகுனிகள் நிறைய இருக்கிற இந்த சமூகத்துல யோகியவானா இருக்கறது ரொம்ப கஷ்டம். சாணக்கிய தன்மையும் வேண்டும்!  சாமர்த்தியமும் வேண்டும்.!  இந்த இரண்டும் இருக்கிறது அவர் பிழைச்சுக்குவார்! சினிமாவில் நடிக்க வந்து 50 வருடங்கள் ஆகப்போகிறது. ஒன்றும் தெரியாமல் ரயில் ஏறி சென்னை வந்து நீங்கள்(ரசிகர்கள்) கொடுத்த ஆதரவில் தான் இங்கே இருக்கிறேன்.. நன்றி” என்று தெரிவித்தார்.